திண்டிவனம் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் திடீர் கைது.. 16 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார்...

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக திண்டிவனம் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-14 15:08 GMT

விழுப்புரம் மாவட்டக் காவல் துறை அலுவலகம். (கோப்பு படம்).

விழுப்புரம் சாலாமேடு காமராஜர் நகர் விரிவு குறுக்கு தெருவை சேர்ந்தவர் பழனிவேலு (வயது 60). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஊழியராக பணியாற்றி வந்தபோது பழனிவேலுவுக்கும் டி.கீரனூரை சேர்ந்த அப்துல்ஜப்பார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது பழனிவேலு, தனது மகள்களுக்கு அரசு வேலை விஷயமாக அப்துல்ஜப்பாரிடம் பேசினார். அதற்கு அவர், தனது நண்பரான திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை பகுதியை சேர்ந்த முகமதுஷெரீப் (45) என்பவர் மூலமாக அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி உள்ளார். அதை நம்பிய பழனிவேலு, தனது மகள்களுக்கு அரசு வேலை வாங்கித்தரும்படி கேட்டு முகமதுஷெரீப், அப்துல்ஜப்பார் ஆகிய இருவரிடமும் ரூ.16 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் இருவரும், பழனிவேலுவின் மகள்களுக்கு அரசு வேலை ஏதும் வாங்கித்தராமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.

இதனால் அவர்கள் இருவரையும் பழனிவேலு பலமுறை சந்தித்து தனது மகள்களுக்கு அரசு வேலை வாங்கித்தரும்படியும், இல்லையெனில்தான் கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படியும் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், பழனிவேலுக்கு பணத்தை கொடுக்காமல் அவர்கள் இருவரும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பழனிவேலு, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவை பெற்ற அவர், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் முகமதுஷெரீப், அப்துல்ஜப்பார் ஆகிய இருவரின் மீதும் நம்பிக்கை மோசடி, கூட்டுசதி செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சம்பத்குமார் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் திண்டிவனம் பகுதியில் முகமதுஷெரீப்பை போலீஸார் இன்ரு கைது செய்தனர். கைதான முகமது ஷெரீப் திண்டிவனம் நகரமன்ற முன்னாள் துணைத்தலைவராகவும், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராகவும் இருந்துள்ளார். தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு சசிகலா அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News