அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் மகளிர் ஆணையம் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூர் அன்புஜோதி ஆசிரமத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் மகளிர் ஆணையம் விசாரணை;

Update: 2023-02-19 09:37 GMT

குண்டலபுலியூர் ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் மகளிர் ஆணையம் விசாரணை நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூர் அன்புஜோதி ஆசிரமத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர் ஆணைய அதிகாரி விசாரணை விரைவில் அறிக்கை சமர்ப்பிப்போம் என்று பேட்டியில் அன்புஜோதி ஆசிரமத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் நேரில் விசாரணை நடத்தினார். விரைவில் அறிக்கை சமர்ப்பிப்போம் என்று அவர் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி அரசுத்துறை அதிகாரிகளும், போலீசாரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். இதில் அந்த ஆசிரமம் அனுமதியின்றி இயங்கியதுடன், ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர்களை கடும் சித்ரவதைக்கு ஆளாக்கியதும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததும், அங்கிருந்த பலர் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஆசிரமத்தில் இருந்த 143 பேரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வெவ்வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 16 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் விழுப்புரம் வந்தார். அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு ஆசிரமத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண்களிடம் நலம் விசாரித்தார். மேலும் அவர் ஒவ்வொருவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

அப்போது ஆசிரமத்தில் எவ்வளவு ஆண்டுகளாக தங்க வைக்கப்பட்டுள்ளீர்கள்,அங்கு 3 வேளையும் சரியாக உணவு வழங்கப்பட்டதா, யாரேனும் அடித்து துன்புறுத்தினார்களா, தனி அறையில் அடைத்து வைத்தோ அல்லது இரும்புச்சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமைப்படுத்தினார்களா, ஆசிரமத்தில் உங்களை என்னென்ன வேலைகளை செய்ய சொன்னார்கள், உங்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள் யாரேனும் பார்க்க வந்தார்களா,மற்றும் ஆசிரமத்தில் போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதா,குரங்குகள் மற்றும் நாய்களை விட்டு கடிக்க வைத்தார்களா,என்று பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார். குறிப்பாக பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களிடம் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த விசாரணையின்போது மாவட்ட ஆட்சியர் சி.பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, தேசிய மகளிர் ஆணைய வழக்கறிஞர் மீனாகுமாரி, குழந்தைகள் பாதுகாப்பு நல இயக்குனர் அமர் குஸ்வாஹா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, மாவட்ட சமூகநல அலுவலர் ராஜாம்பாள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி, விழுப்புரம் கோட்டாட்சியர் (பொறுப்பு) விஸ்வநாதன், விக்கிரவாண்டி வட்டாட்சியர் ஆதிசக்தி சிவக்குமரிமன்னன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சங்கீதா, மனநல மருத்துவத்துறை தலைவர் புகழேந்தி, மருத்துவ அலுவலர் வெங்கடேசன், காவல் ஆய்வாளர் விநாயகமுருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து குண்டலப்புலியூருக்கு சென்ற தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார், அங்குள்ள அன்புஜோதி ஆசிரமத்தை பார்வையிட்டார். அப்போது ஆசிரமத்தில் அலுவலர்கள், பணியாளர்கள் தங்கும் அறை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் தங்கும் அறைகள், சமையல் அறை, உணவு பரிமாறும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டதோடு அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் தங்கும் அறைகளில் மின்விளக்கு வசதி, மின்விசிறி வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செஞ்சி, மேல்மலையனூர் அருகே உள்ள துறிஞ்சிப்பூண்டி ஆகிய இடங்களில் உள்ள மனநல காப்பகங்களுக்கு சென்று அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த பெண்களிடம் விசாரணை மேற்கொண்டார். முன்னதாக தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அன்புஜோதி ஆசிரம வழக்கை பொறுத்தவரை மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து இவ்வழக்கை விசாரணை செய்கிறது. வழக்கை விசாரிக்க என்னையும், மகளிர் ஆணைய வழக்கறிஞர் மீனாகுமாரியையும் நியமனம் செய்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் ஆசிரமத்தில் இருந்த பெண்கள் இருவரிடம் பாலியல் அத்துமீறல் நடந்தது தெரியவருகிறது. ஆசிரமத்தில் உள்ள அலுவலக அறைகள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்த அறைகளை ஆய்வு செய்தோம். அவைகள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்பட்டது. விசாரணை முழுமை அடைந்த பிறகு விரைவில் ஆணையத்தில் அறிக்கை சமர்ப்பிப்போம் என அவர் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த திருவக்கரையில் புகழ்பெற்ற கல்மரப்பூங்கா உள்ளது. அந்த கல்மரப்பூங்கா தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதிலிருக்கும் கல்மரங்கள், ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில் மட்டுமே பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்புஜோதி ஆசிரம வளாகத்திற்குள் 3 அடி உயரமுள்ள கல்மரம் இருந்துள்ளது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்மரம், இந்த ஆசிரமத்துக்குள் எப்படி வந்தது, அதனை ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி கடத்திக்கொண்டு வந்து ஆசிரமத்தில் வைத்திருந்தாரா,என்ற விவரம் தெரியவில்லை. இதனை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அன்புஜோதி ஆசிரமத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மருந்து, மாத்திரைகள், ஊசிகள் போன்றவற்றை ஆய்வுக்காக மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மருந்து, மாத்திரைகளை விழுப்புரம், திண்டிவனம் மருந்து ஆய்வாளர்கள் மற்றும் தனியார் மருந்தாளுனர்களை கொண்டு மருந்துகளின் பெயர்கள், அதன் தன்மை, அதனுடைய வீரியம், அவை என்னென்ன நோய்களுக்காக, எந்தெந்த வயதுடையவர்களுக்கு பயன்படுத்தப்பட்டவை. அந்த மருந்துகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மருந்துகள்தானா அல்லது அங்குள்ள வயதானவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள்தானா, காலாவதியான மருந்துகள் ஏதேனும் உள்ளதா, போதை தரக்கூடிய வகையில் மருந்துகள், மாத்திரைகள் ஏதேனும் உள்ளதா,என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். --- அன்புஜோதி ஆசிரமத்தில் எழுந்த பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து அரசுத்துறை அதிகாரிகளும், போலீசாரும் அங்கு சோதனை நடத்தினர்.

இதில் ஆசிரம வளாகத்தில் மண்டை ஓடு ஒன்று கிடந்தது. அங்கு தங்க வைக்கப்பட்டவர்களில் யாரேனும் இறந்திருந்து அவர்களது மண்டை ஓடாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். மேலும் யாரேனும் நரபலி கொடுக்கப்பட்டிருப்பார்களோ என்றும் சந்தேகம் எழுந்தது. இதனால் அந்த ஆசிரமத்தில் பரபரப்பு நிலவியது. பின்னர் அந்த மண்டை ஓட்டை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அது இறந்துபோன நாயின் மண்டை ஓடு என்பது தெரிந்தது. அதன்பிறகே அந்த பரபரப்பு அடங்கியது.

Tags:    

Similar News