அனுமதி இன்றி காப்பகங்கள் இயங்கினால் கடும் நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதி இன்றி காப்பகங்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பழனி தெரிவித்தார்
விழுப்புரம் மாவட்டத்தில் உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் இல்லங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் அருகே பாணாம்பட்டை அடுத்த கோணங்கிபாளையம் கிருபாலயா நலங்குன்றியோர் நலவாழ்வு மையம், அசோகபுரி வேலா மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் ஆகியவற்றை நேற்று மாவட்ட ஆட்சியர் சி.பழனி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, இந்த காப்பகம் நடத்துவதற்கான அரசால் அங்கீகாரம் வழங்கப்பட்ட அனுமதிச்சான்று, கட்டிட நிலைத்தன்மைக்கான சான்று, தீ தடுப்பு அனுமதிச்சான்று, மருத்துவ சான்று, தங்க வைக்கப்பட்டுள்ள முதியோர், குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த பதிவேடுகள், பணிபுரியும் பணியாளர்கள் விவரம் குறித்த பதிவேடு, உணவு வழங்கும் பட்டியல் பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் முதியோர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அறைகளில் அடிப்படை வசதிகளான படுக்கையறை, மின் விளக்கு, காற்றோட்ட அறை, அறையில் தங்கும் நபர்களின் எண்ணிக்கை குறித்து பார்வையிட்டதோடு அங்குள்ள முதியவர்களிடம் நாள்தோறும் வழங்கப்படும் உணவு, மருத்துவ வசதி, பராமரிப்பு வசதி, காப்பக பணியாளர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து கேட்டறிந்தார். அதுபோல் குழந்தைகளுக்கான அறைகளில் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி, கல்வி கற்பிக்கும் அறை, அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு இந்த காப்பகத்தில் அச்சம் தரக்கூடிய வகையில் செயல்கள் மேற்கொள்ளப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.
இங்கு உள்ள சமையலறை, உணவருந்தும் இடம், கழிவறை, குடிநீர் வசதி, மைய வளாகம், பொருட்கள் வைப்பறை, உணவு பொருட்கள் தயாரிக்கும் பொருட்களின் தரம், சுகாதாரத்தன்மை, கண்காணிப்பு கேமரா வசதி, தியான அறை, மருத்துவ முதலுதவி சிகிச்சை வசதி போன்றவை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து நிருபர்களிடம் ஆட்சியர் சி.பழனி, கூறி\யதாவது: அனுமதி பெறாமல் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தின் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் மற்ற ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் பாதுகாப்பு மைங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அரசு அலுவலர்கள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட ஆட்சியர் என்கிற முறையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். சமூக பாதுகாப்புத்துறையின் மூலம் 18 வயதிற்குட்பட்ட அனாதை குழந்தைகளை பராமரிக்கவும், பாதுகாத்திடும் வகையில் 5 இல்லங்கள் அரசு அனுமதியுடனும், ஒரு இல்லம் அரசு அங்கீகார அனுமதி வழங்க கோரப்பட்டுள்ளது. இந்த காப்பகங்களில் 125 மாணவ- மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். சமூக நலத்துறையின் மூலம் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கும் வகையில் 5 முதியோர் காப்பகங்கள் செயல்பட்டு வருகிறது. இதுபோன்று 6 பதிவு பெற்ற தனியார் பெண்கள் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. அதுபோல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தொண்டு நிறுவனங்களால் 9 சிறப்பு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்டத்தில் 4 மனநல காப்பகங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 1 மனநல காப்பகம் பதிவு பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள மனநல காப்பகத்தில் ஒன்று இன்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மற்ற 2 மனநல காப்பகம் பதிவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்புப்பள்ளிகள், இல்லங்கள், மகளிர் விடுதிகள் போன்றவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு கொண்டிருப்பவைகளில் அடிப்படை வசதிகள் குறித்தும், அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் இல்லங்கள் மற்றும் சிறப்புப்பள்ளிகளில் அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாதந்தோறும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு உரிய அறிக்கையை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உரிய அங்கீகாரம் பெறாமல் காப்பகங்கள் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் பழனி. இந்த ஆய்வின்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, உதவி ஆட்சியர் (பயிற்சி) லாவண்யா உட்பட பலர் உடனிருந்தனர்.