விழுப்புரத்தில் தென்பிராந்திய ராணுவத் தலைவர் திடீர் ஆய்வு

விழுப்புரம் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தென்பிராந்திய ராணுவத் தலைவர் திடீர் ஆய்வு செய்தார்

Update: 2022-03-12 12:00 GMT

விழுப்புரம் முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் ஆய்வு செய்த தென்பிராந்திய ராணுவ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் 

தென்பிராந்திய ராணுவ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் விழுப்புரம் வருகை தந்தார். அவர் விழுப்புரம் சேர்மன் சிதம்பரம் தெருவில் உள்ள முன்னாள் படைவீரர் நல மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மருத்துவமனையில் போதிய வசதிகள் உள்ளனவா என்றும், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் இருப்பு விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதோடு அங்கு வந்திருந்த நோயாளிகளிடம் உரிய முறையில் சிகிச்சை அளிக்கின்றார்களா என்று கேட்டறிந்தார்.மேலும் மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லை என்றும், புதிய மருத்துவமனை கட்டித்தரும்படியும், இதற்காக விழுப்புரம்- செஞ்சி சாலையில் 20 சென்ட் அளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு உடனடியாக முன்னாள் படைவீரர் நல மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்கும்படி தென்பிராந்திய ராணுவ தலைவர் அருணிடம் முன்னாள் படைவீரர்கள் முறையிட்டனர்.

அதற்கு அவர், இதுபற்றி ராணுவ தலைமையகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.அதனை தொடர்ந்து முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் தென்பிராந்திய ராணுவ தலைவர் அருண் ஆய்வு மேற்கொண்டு அலுவலக முக்கிய கோப்புகளை பார்வையிட்டார். அதோடு அங்கிருந்த பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது கர்னல் வேல்முருகன், கர்னல் கார்கே, கர்னல் அனுச், விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அருள்மொழி, முன்னாள் படைவீரர்கள் நல தலைவர் மார்க், செயலாளர் அருளப்பன், பொருளாளர் சாலமன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News