தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது: மகளிர் ஆணைய தலைவர்
Tamilnadu Women Commission-தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி தெரிவித்துள்ளார்.;

விழுப்புரத்தில் நடைபெற்ற மகளிர் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம்
Tamilnadu Women Commission- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், மகளிர் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆய்வு செய்த மகளிர் ஆணையத் தலைவர் குமாரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் மாமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு அமைத்து பெண்களுக்கான விழிப்புணர்வை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு இதற்காக விரைவில் சென்னையில் பயிற்சி பட்டறை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்புக்காக 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், அரசு, தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றக்கூடிய இடங்களில் புகார் குழுக்கள் கட்டாயம் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
காவல் நிலையங்களில் பெண்கள் புகாரளிக்க வரும்பொழுது, அவர்களிடம் கனிவாக பேசி, அவர்களின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெண்களை காப்பதற்கும், பெண்கல்வி ஊக்குவிப்பதற்கும், குழந்தை திருமண தடுப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு போன்றவற்றை முற்றிலும் தடுப்பதற்கும், பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
பள்ளி நாள்களில் மாணவ, மாணவிகள் பள்ளிகள் முடித்து வீடுகளுக்கு செல்லும் வரை காவல்துறையினர் ரோந்து பணியில் இருக்க வேண்டும். அதேபோல், பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை போல் ஆசிரியர்களுக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், ஒவ்வொரு கல்வி நிலையங்களிலும் புகார் பெட்டி வைத்து அதில் வரும் புகார் கடிதங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தக்க நடவடிக்கை மேற்கொண்டு எந்த வகையிலும் குற்றச்செயல் நடக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுசுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்துறையின் மூலம் வளரிளம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் ஆகியோருக்கு பாதுகாப்பு அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு வழங்கி பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இன்றைய கால கட்டத்தில் போதிய விழிப்புணர்வு காரணமாக அவ்வப்போது ஏற்படும் பெண்களுக்கான கொடுமைகளை நேரடியாக புகார் தெரிவிக்கும் அளவுக்கு தைரியமாக பெண்கள் முன்வந்துள்ளனர்.
தொழிலாளர் நலத்துறையின் மூலம், குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்து குழந்தைகளை உயர்கல்வி வரை படிக்க உறுதுணையாக இருக்க வேண்டும். தேசிய அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குற்ற செயல்கள் மிகவும் குறைவாக உள்ளது மட்டுமல்லாது. குறைந்தும் வருகிறது என்றார்
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் த.மோகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித், மகளிர் ஆணைய உறுப்பினர் சீத்தாபதி சொக்கலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2