இலவச அடுக்குமாடி குடியிருப்பு கேட்டு பட்டியலின மக்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் இலவச அடுக்குமாடி குடியிருப்பு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஜி ஆர் பி என அழைக்கப்படும் பட்டியலின மக்கள் குடியிருக்கும் பகுதி, விழுப்புரம் நகராட்சி பகுதியை சேர்ந்தது. கடந்த பல ஆண்டுகளாக மக்கள் நெருக்கமாக ஒரே வீட்டில் பல குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கழிவுநீர் உட்பட எந்த சுகாதார மேம்பாடுகளையும் செயல்படுத்துவதில் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. அதனால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் சுகாதார சீர்கேடுகளால் பல்வேறு மர்ம நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
எனவே அப்பகுதி மக்கள் நெருக்கத்தை குறைக்க, தமிழக அரசு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் காலியிடத்தில் தலித் உட்கூறு சிறப்பு நிதியில் அடுக்குமாடி குடியிப்புகளை கட்டி பட்டியலின மக்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்.சி,எஸ்.டி பெடரேஷன் சார்பில் மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் முத்துகுமரன், மாவட்ட செயலாளர் சங்கரன் உட்பட பலர் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.