சத்துணவு ஊழியர் சங்கத்தினர் விழுப்புரத்தில் கோரிக்கை பேரணி
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.;
விழுப்புரம் சத்துணவு ஊழியர்கள் பேரணியில், 40 ஆண்டுகளாக பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கை அரசு கைவிட வேண்டும்.
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணிக்கு மாவட்ட தலைவர் கிருபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வீமன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் தேசிங்கு கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன், பேரணியை தொடங்கி வைத்தார். சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, ஜானகிதேவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில செயலாளர் பார்த்திபன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட செயலாளர் மூர்த்தி நிறைவுரையாற்றினார். இப்பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு முடிவடைந்தது. இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் துரை, காசி, ரீட்டாமேரி, இணை செயலாளர்கள் புனிதா, மோகனா, தீனவெண்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சத்யா நன்றி கூறினார். பேரணி முடிவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.அதனை தொடர்ந்து கலைந்து சென்றனர்.