ரூ.10 கோடி வீண்.. மீண்டும் உடைந்த கால்வாய்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

செஞ்சி அருகே கால்வாய் மீண்டும் சேதமடைந்ததால் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.;

Update: 2023-03-20 16:42 GMT

மீண்டும் உடைந்துள்ள வராக நதி கால்வாய்.

ரூ.10 கோடியில் சீரமைத்தும் பயனில்லாமல் மீண்டும் உடைந்த வராக நதி கால்வாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியில் பயன்பெறும் 15 ஏரிகளின் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே செவலபுரை ஊராட்சியில் வராக நதியில் உள்ளது தடுப்பு அணைக்கட்டு, இந்த அணைக்கட்டில் இருந்து பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் வராக நதி கால்வாய் உள்ளது. இதன்மூலம் வல்லம் ஒன்றியத்தில் உள்ள மேல்கலவாய், நெகனூர், பெரும்புகை, வடவானூர், நங்கிலி கொண்டான், ஆனத்தூர், வித்பட்டு, கடம்பூர், வடபுத்தூர், ஆனாங்கூர், கொறவணந்தல், களையூர், நாட்டார்மங்கலம் உள்பட 15-க்கும் மேற்பட்ட ஏரிகள் பயன் பெறுகின்றன.

மழைக்காலங்களில் செவலபுரை அணைக்கட்டுக்கு வரும் தண்ணீர் 20 கிலோ மீ்ட்டர் நீளமுள்ள வராக நதி கால்வாய் மூலமாக 15 ஏரிகளுக்கு செல்லும். பின்னர் அந்த ஏரியில் இருந்து பாசனத்துக்காக விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.

அப்பகுதி விவசாயிகளின் வரப்பிரசாதமாக இருந்த இந்த கால்வாய் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, கடந்த 2015-ம் ஆண்டில் ரூ.10 கோடி மதிப்பில் வராக நதி கால்வாய் சீரமைக்கப்பட்டது. இதில் 5 கிலோ மீட்டர் நீளத்துக்கு சிமெண்டு கால்வாயாக மாற்றப்பட்டது. மீதமுள்ள 15 கிலோமீட்டர் மண்கால்வாய் இருபுறமும் தூர்வாரி புனரமைப்பு செய்யப்பட்டது. அதன் பிறகு இக்கால்வாயில் தண்ணீர் சென்று 15 ஏரிகள் நிரம்பின.

இந்த நிலையில் அணைக்கட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கால்வாயில் வளைவு ஒன்று உள்ளது. இந்த இடத்தில் அன்னமங்கலம் மற்றும் சமத்துகுப்பம் உள்பட பல்வேறு ஏரிகளில் இருந்து உபரி நீர் கால்வாயின் குறுக்கே செல்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டில் கால்வாயில் அதிகமாக தண்ணீர் சென்றதால் வளைவில் உடைப்பு ஏற்பட்டது. உடனே பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தற்காலிகமாக சீரமைத்தனர். இந்த மணல் மூட்டைகளும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் 15 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. மாறாக அவை வறண்டு கிடக்கின்றன. இந்த ஏரியை நம்பியுள்ள விவசாயிகளின் நிலை பரிதாப நிலைக்கு சென்று விட்டது.

எனவே அந்த உடைந்த வராக நதி கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று 15 ஏரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்குமா, அல்லது அப்பகுதியை சேர்ந்த தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நடவடிக்கை எடுப்பாரா என அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து கவனத்தில் எடுத்து பொதுப்பணி துறையை முடித்துவிட்டு இந்த கோடை காலத்திலேயே கால்வாய் உடைப்புகளை சரி செய்ய வேண்டும் அப்பொழுதுதான் பருவமழையின் போது அணைக்கட்டில் இருந்து தண்ணீர் சம்பந்தப்பட்ட ஏரிகளுக்கு செல்லும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News