விழுப்புரம் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
விழுப்புரம் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற முயன்ற போது அப்பகுதியில் குடியிருப்போர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. இதில் காணை அடுத்த தோகைப்பாடி கிராமத்தில், 20க்கும் மேற்பட்ட வீடுகளும், 30 கடைகள் சாலையோர ஆக்கிரமிப்பில் கட்டபட்டு உள்ளது.
இந்த கடைகள் மற்றும் வீடுகளைக் கட்டி ஆக்கிரமித்துள்ளவர்கள் அவர்களாகவே அகற்றிக் கொள்ள பொதுப்பணித்துறை நோட்டீஸ் வழங்கி இருந்தது. ஆனால், இதுவரை அகற்றிக் கொள்ளவில்லை. பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைப் பிரிவு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றனர். இதற்கு, குடியிருப்பு வாசிகள் மற்றும் கடை நடத்துவோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுக்கு மாற்று இடம் வழங்கிய பின், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்து, விழுப்புரம் - திருக்கோவிலுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், காணை பொறுப்பு இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று, முடிவு அறிவிப்பதாக தெரிவித்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று, மறியல் போராட்டம் ஆக்கிரமிப்பாளர்கள் கலைந்து சென்றனர்.