விழுப்புரத்தில் சாலைமறியல்: போக்குவரத்து பாதிப்பு
காணை ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியலூர் திருக்கை கிராம மக்கள் விழுப்புரத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம்,காணை ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியலூர்திருக்கை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சாலை உருளை சின்னத்தில் சசிகலா ரவியும்,ஆட்டோ சின்னத்தில் வனிதா நாகராஜ் ஆகியோர் உட்பட பலர் போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் கடந்த 9 ந்தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
அதனையடுத்து 12 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து, இதில் எட்டு வாக்கு வித்தியாசத்தில் வனிதா நாகராஜ் ஆட்டோ சின்னத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து, கை உருளை சின்னத்தில் போட்டியிட்ட சசிகலா ரவி ஆதரவாளர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதுச்சேரி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர், பேச்சுவார்த்தையில் சாலை மறியலை கைவிட்டனர், அதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.