அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தை ஓய்வு பெற்றோர் முற்றுகை
விழுப்புரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தை ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் விழுப்புரம் கிளை தலைவர் பழமலை தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ராமச்சந்திரன் கண்டன உரையாற்றினார். இதில் மாநில துணை செயலாளர் சகாதேவன், நிர்வாகிகள் சேஷையன், பலராமன், சின்னராசு, கலியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களான பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, ஓய்வூதிய ஒப்படைப்பு, அகவிலைப்படி, ஓய்வுகால சேமநல நிதி ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உடனடியாக விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுபற்றி உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.