மீண்டும் மீண்டும் உடையும் தடுப்பணை: வீணாகும் நீரால் விவசாயிகள் கவலை

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை மீண்டும் மீண்டும் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதால் விவசாயிகள் கவலை.

Update: 2021-11-09 16:27 GMT

மீண்டும் மீண்டும் உடைப்பெடுக்கும் தளவானூர் தடுப்பணை

விழுப்புரம் மாவட்டம், தளவானூரில் தென்பெண்ணை ஆற்றில் கடந்த ஆண்டு கட்டப்பட்ட தடுப்பணை மீண்டும், மீண்டும் உடைந்து தண்ணீர் வீணாகி அப்பகுதி விவசாயிகளை  கவலையில் ஆழ்த்தியுள்ளது, உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம்,தளவானூர், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு இடையே செல்லும் தென்பெண்ணை ஆற்றில் அப்பகுதி விவசாயிகளின் 30 ஆண்டு கனவு கோரிக்கையான தளவானூர் தடுப்பணை அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.25.17 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டது. கடந்த 2019 ஆண்டு தடுப்பணை கட்டுமான பணி அவசர அவசரமாக தொடங்கி, 2020-ல் பணி முடிக்கபட்டது. மேலும் கடந்த  சட்ட மன்ற தேர்தலை மனதில் வைத்து அப்போதைய அதிமுக அரசு அவசர அவசரமாக கடந்த 2020 ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்க இருந்த நிலையில் செப்டம்பர் 19 ந்தேதி அணையை விவசாய பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்,

அப்போது அந்த ஆண்டு தொடங்கிய வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர், புரவி ஆகிய புயல்களின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு மாதமாக கனமழை பெய்தது. அதன் காரணமாக மழை வெள்ளநீர் ஆற்றில் பாய்ந்தோடியது, அதனால் தடுப்பணையில் டிசம்பர் முதல் தண்ணீர் இருந்து கொண்டே இருந்த நிலையில், திடீரென தடுப்பணையின் எனதிரிமங்கலம் பக்கம் உள்ள கரைபகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் தடுப்பணையில் தேங்கிய மழைநீர் அனைத்தும் உடைப்பு வழியாக வெளியேறி அப்போது அப்பகுதி விவசாயிகளை பெரிதும் பாதிப்படைய செய்தது.

அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்குள், இந்த ஆண்டும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது, தற்போது அந்த உடைப்பை சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த தடுப்பணை இப்பகுதி விவசாயிகளின் 30 ஆண்டு கோரிக்கை, இந்த தடுப்பணை ரூ.25.17 கோடியில் கட்டி உள்ளனர். அதன் பிறகு உடைப்பை சரிசெய்ய ரூ.9 கோடி அவசர அவசரமாக நிதி ஒதுக்கி பணி செய்தனர்.   தற்போது கடந்த சில நாட்களே பெய்து வரும் வடகிழக்கு பருவமழைக்கே தாங்காமல் தடுப்பணை மீீண்டும், மீண்டும் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

தடுப்பணை கட்டுமான பணியின் போது சிபிஎம் மற்றும் இப்பகுதி விவசாய மக்கள் தரமில்லை என குற்றச்சாட்டு வைத்தனர். தற்போது இந்த ஆண்டும் உடைப்பு ஏற்பட்டு, இந்த தடுப்பணை தரமற்ற முறையில் கட்டப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

தற்போது அதனை சரிசெய்ய திமுக அரசு ரூ.35 கோடியே 37 லட்சம் ஒதுக்கீடு செய்து உள்ளது, வரவேற்க தக்கது என்றாலும்,  தடுப்பணை உடைவதற்கு முன்பு இதனை கண்காணித்து சரி செய்து இருக்கலாம், கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தவறை 6 மாத திமுக ஆட்சியில் முன்னுரிமை கொடுத்து நீீர்நிலைகளை கண்காணித்து சரி செய்திருந்தால், தற்போது இவ்வளவு கோடி அரச நிதி வீணாகி இருக்காது. 

தற்போது மாவட்டத்தில் திமுக பல இடங்களில் முன் முயற்சி எடுத்து பல திட்டங்களை செய்து வந்தாலும், இதுபோல இந்த 6 மாத காலத்தில் செய்து இருந்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள், தற்போது உடைந்து உள்ள அதே பகுதியில் புதிதாக கட்டப் போவதாக உள்ள புதிய தடுப்பணைக்கு, தற்போது அறிவித்துள்ள நிதியை விட தேவையானால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, தரமான முறையில் பணி நிறைவேற்ற வேண்டும், அதுவே விவசாயிகளுக்கு அரசு செய்யும் உதவியாக இருக்கும். 

மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாத்து,நீர்நிலை ஆக்ரமிப்புகளை அகற்றி,மழை நீரை தேக்கி நிலத்தடி நீரை உயர்த்தி, மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்,   

Tags:    

Similar News