பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம்

விக்கிரவாண்டியில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கோர்ட்டில் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.;

Update: 2023-03-11 08:49 GMT

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் (கோப்பு படம்).

விக்கிரவாண்டி அருகே பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட மாணவி கோர்ட்டில் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர், அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படித்து வரும் 17 வயதுடைய மாணவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி இரவு 8 மணியளவில் அவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள கப்பியாம்புலியூர் ஏரிக்கரைக்கு சென்றனர். அங்கு இருவரும் தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரில் ஒருவர் திடீரென, தான் வைத்திருந்த கத்தியால் மாணவரை சரமாரியாக குத்தியதோடு கூச்சலிட முயன்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். பின்னர் கத்திமுனையில் அம்மாணவியை 3 பேரில் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் அவர்களின் 2 செல்போன்கள், நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை விக்கிரவாண்டி போலீசாரிடம் அம்மாணவியும், மாணவரும் கூறினர்.

பின்னர் இருவரையும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சரக காவல் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் மாணவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இதுதொடர்பாக போக்சோ சட்டப்பிரிவு உள்பட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அம்மாணவியும், மாணவரும் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க முதலில் 8 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இருப்பினும் எந்தவித துப்பும் துலங்காததால் கூடுதலாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.இந்த தனிப்படை போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதிவான செல்போன் எண்கள் மூலம் சைபர்கிரைம் போலீசாரின் உதவியுடன் விசாரணையை முடுக்கிவிட்டனர். அதோடு அம்மாணவி, மாணவரின் கிராமத்தை சேர்ந்தவர்கள், சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் குற்றம் நடந்ததாக கூறப்படும் அப்பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் பதிவாகியுள்ள செல்போன் எண்கள் அடிப்படையிலும் பலரை சந்தேகத்தின்பேரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகளில் சுமார் 100 போலீசார் இடம்பெற்றுள்ள நிலையில் அவர்கள் கடந்த 10 நாட்களாக பல்வேறு கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறபோதிலும் எந்தவித துப்பு துலங்காமலும், உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய முடியவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக உள்ளூரை சேர்ந்தவர்கள், வெளியூரை சேர்ந்தவர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோதிலும், இவ்வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் புகார் கொடுத்த பள்ளி மாணவர், மாணவி ஆகியோரிடம் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் உண்மை நிகழ்வுகளை தெரிவித்தார்களா, அல்லது தங்கள் மீதுள்ள குற்றங்களை மறைப்பதற்காக பொய்யான தகவல் ஏதேனும் கூறியுள்ளனரா என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதை கண்டறிவதற்காக போலீசாரின் பரிந்துரைப்படி விழுப்புரம் மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) ராதிகா முன்னிலையில் அம்மாணவி ரகசிய வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்தார். இந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை நீதிமன்ற அனுமதியுடன் பெற்று அதன் அடிப்படையில் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News