ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 31.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 31.50 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.;

Update: 2023-03-15 16:28 GMT

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம். (கோப்பு படம்).

விழுப்புரம் மாவட்டம்,  திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இளந்துறை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 62). இவர் தனக்கு தெரிந்த புதுச்சேரியை சேர்ந்த பிரபாகர் என்பவர் மூலம் புதுச்சேரி தர்மாபுரியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு அறிமுகமாகி உள்ளார்.

அப்போது மணிகண்டன், அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் நாராயணசாமியிடம் சென்று, தாங்கள் இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை செய்து வருவதாகவும், தங்களுக்கு உயர் அதிகாரிகள் நன்கு பழக்கம் இருப்பதால், உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு தாங்கள் வேலை வாங்கி தருவதாகவும் கூறி உள்ளனர்.

இதை நம்பிய நாராயணசாமி, தனது மருமகள் சுகன்யா உள்பட 6 பேருக்கு வேலை வாங்கிதரக் கோரி மொத்தம் ரூ. 40 லட்சத்தை மணிகண்டன், பிரபாகர், மணிகண்டன் மனைவி மகேஸ்வரி, மணிகண்டனின் தந்தை முனியப்பன், தாய் சாந்தி, தங்கை நித்யா ஆகியோரிடம் கொடுத்து உள்ளார்.

 ஆனால், அவர்கள் போலி பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றி விட்டனர் என கூறப்படுகிறது. இதையடுத்து பணத்தை திருப்பித் தரும்படி கேட்டதற்கு ரூ. 8 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் திருப்பிக் கொடுத்து உள்ளனர். மீதமுள்ள ரூ. 31 லட்சத்து 50 ஆயிரத்தை தராமல் அவர்கள் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர்.

இதுகுறித்து நாராயணசாமி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின்பேரில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, முனியப்பன் (54) என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News