காசநோய் குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை
காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பழனி அறிவுரை கூறினார்.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் ஒழிப்பு தின விழா விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் காசநோய் என்பது குணப்படுத்தக்கூடிய ஒரு நோயாகும். இந்நோய் காற்றின் மூலம் பரவக்கூடியது. தொடர் இருமல் சளியுடன் கூடிய ரத்தம் வருதல், இரவில் வியர்வை, விவரிக்க முடியாத காய்ச்சல், நாள்பட்ட இருமல், பசியின்மை, எடை இழப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவரின் ஆலோசனையின்படி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உரிய சிகிச்சை மற்றும் சத்தான உணவுகள் எடுத்துக்கொள்வதன் மூலம் காசநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
முன்னதாக, காசநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் காசநோய் பரிசோதனை செய்வதற்கு மைக்ரோஸ்கோப் கருவிகள், அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் காசநோய் பற்றி அறிந்துகொள்ள இலவச சேவை எண் 1800116666 திறந்து வைக்கப்பட்டது.
மேலும் 2022- 2023-ம் ஆண்டில் காசநோய் ஒழிப்பு மற்றும் தடுப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, காசநோய் பற்றி நடத்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் வினாடி- வினா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கீதாஞ்சலி, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், துணை இயக்குனர் (தொழுநோய் பிரிவு) மாதுளா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பொற்கொடி, துணை இயக்குனர் (காசநோய் பிரிவு) சுதாகர், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் அகிலா உள்பட பலர் கலந்து நிகழ்ச்சியில் கொண்டனர்.