கட்டுமான பொருட்கள் திருடிய மூன்று பேர் கைது
விழுப்புரம் அருகே கட்டுமான பொருட்களை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்;
விழுப்புரம் அருகே மேம்பால பணிக்கான கட்டுமான பொருட்களை திருடிய 3 பேரை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே தற்போது 4 வழிச்சாலை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணிக்காக முக்கிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விழுப்புரம் அருகே சுந்தரிப்பாளையம் கிராமத்தில் புதிதாக மேம்பாலம் அமைப்பதற்காக கடந்த சில மாதங்களாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிக்காக கட்டுமான பொருட்கள் அங்கு இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் 150 சென்ட்ரிங் சீட் மற்றும் 250 ஜாக்கிகள் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் சுந்தரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபு (வயது 39), மணிகண்டன் (25), ரகு (40) ஆகியோர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிரபு உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.