மழை நீர் தேங்கிய பிரச்சினையில் கண்பார்வை இழந்த முதியவர் ஆட்சியரிடம் மனு
மேல்மலையனூர் அருகே மழைநீர் தகராறில் கண் பார்வை இழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதியவர் மனு கொடுத்தார்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே தேவனூரில் மழைநீர் தகராறில் கண்ணில் குத்தி கண் பார்வை இழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட முதியவர் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொது மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.
அப்போது விழுப்புரம் மாவட்டம், மேல்மலை யனூர் வட்டம், தேவனூர் கிராமம், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த பெரிய மாதவன் (82), மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.அந்த புகார் மனுவில் கடந்த 19 ஆம் தேதி கிராமத்தில் அதிக மழை பெய்து, மழை தண்ணீர் என் வீட்டின் எதிரில் குளம் போல தேங்கியிருந்தது. இதை நான் அப்புறப்படுத்திய போது, எனது வீட்டின் பக்கத்தில் இருந்த எனது பங்காளியின் பேரன்கள் ராமசாமி (32),லட்சுமணசாமி (32) ஆகிய இரு வரும் என்னை அசிங்கமாக பேசி, என் வீட்டின் எதிரில் ஏன் தண்ணீரைத் திறக்காய் எனக் கே ட்டு, கையில் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் சாவியால் எனது வலது கண்ணைக் குத்தினர்.
மேலும் நாராயணசாமி என்னை கீழே தள்ளி மார்பிலும், முதுகிலும் காலால் எட்டி உதைத்தார்.எனது அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் என்னை மீட்டு, வளத்தி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து செஞ்சி, முண்டியம் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றபோது, வலது கண்ணில் பார்வை தெரியாது எனக் கூறிவிட்டனர். பிறகு சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் 21 தையல் போட்டு சிகிச்சை பெற்று வந்து உள்ளேன்,
இது குறித்து வளத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 15-நாள்களுக்கு மேலாகியும் வளத்தி போலீஸார், தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் இதுவரை கைது செய்யவில்லை. எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.