வரி செலுத்தாதவர்களுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

விழுப்புரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வரி செலுத்தாமல் உள்ளவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும்;

Update: 2023-03-15 15:15 GMT

விழுப்புரம் நகராட்சியில் 31-ந்தேதிக்குள் வரியினங்களை செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் நகராட்சியில் 31-ந்தேதிக்குள் வரியினங்களை செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் இணைப்பு கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி, குத்தகை இனங்கள், திடக்கழிவு மேலாண்மை கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் உள்ளிட்ட வரிகளின் மூலம் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வரிவசூல் செய்யும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக மேற்கண்ட வரியினங்கள், வாடகை பாக்கி என நகராட்சிக்கு ரூ.17 கோடியே 44 லட்சத்து 75 ஆயிரம் செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ளது. இதனால் நகராட்சியின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்களை தீவிரமாக வசூலிக்க முடிவு செய்து அப்பணிகளில் கடந்த சில மாதமாக நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகளில் விழுப்புரம் நகராட்சி 135-வது இடத்தில் உள்ளது. எனவே நகராட்சியில் வரிபாக்கியை முழுமையாக வசூலிக்க நகராட்சி அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தீவிர வரிவசூல் பணியை மேற்கொள்வது குறித்து நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமை தாங்கி வரிவசூல் பணியை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விழுப்புரம் நகராட்சியில் வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவை வைத்துள்ள நிலுவைதாரர்கள் உடனடியாக நிலுவையின்றி செலுத்தி விழுப்புரம் நகர வளர்ச்சி பணிகளை செயல்படுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நிலுவைதாரர்கள் வரி இனங்களை வருகிற 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஓராண்டு மற்றும் அதற்கு மேல் வரியினங்களை செலுத்தாதவர்கள் மீது ஜப்தி மற்றும் நீதிமன்றம் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்தாமல் பாக்கி வைத்து உள்ளவர்களுக்கு 30 நாட்கள் அவகாசம், 15 நாட்கள் அவகாசம், 7 நாட்கள் அவகாசம், 3 நாட்கள் அவகாசம், 24 மணி நேர அவகாசம் இப்படி 5 விதமான நோட்டீசு கொடுத்தும், வரி செலுத்தாவிடில் அவர்களது வீட்டில் இருக்கும் நிலக்கதவு மற்றும் வீட்டினுள் இருக்கும் பொருட்கள் ஜப்தி செய்யப்படும்.

அவ்வாறு ஜப்தி செய்யப்பட்டு 3 நாட்களுக்குள் வரியினங்களை செலுத்தாவிடில் அந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கக்கூடிய தொகையை ஈடுகட்ட முடிவு செய்துள்ளோம். மேலும் நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பப்படும். சம்மன் பெற்று 3 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் அவர்கள் மீது நீதிமன்றத்தின் மூலமாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நிலுவைதாரர்கள் வரியினங்களை உடனடியாக இம்மாத இறுதிக்குள் நகராட்சியில் செலுத்தி ஜப்தி மற்றும் நீதிமன்ற குற்றவியல் நடவடிக்கையை தவிர்த்துக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். அப்போது நகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News