இயந்திர கோளாறு: பொங்கல் பரிசு வாங்கச் சென்ற மக்கள் அவதி

விழுப்புரம் அருகே பல்வேறு இடங்களில் பயோமெட்ரிக் இயந்திரகோளாறு ஏற்பட்டதால் பொங்கல் பரிசு வாங்க வந்த மக்கள் காத்திருந்தனர்

Update: 2023-01-10 05:00 GMT

விழுப்புரம் தந்தை பெரியார் நகர், சீனிவாசா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

விழுப்புரத்தில் பயோமெட்ரிக் எந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியாமல் அவதியடைந்த பொது மக்கள் வெகுநேரம் காத்திருந்தனர். இதில் 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்காக வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி கடந்த 3-ந் தேதி தொடங்கி 8-ந் தேதி நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து நேற்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கும் பணி தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் 6,15,020 குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் 434 பேர் என மொத்தம் 6,15,454 பேருக்கு 1,254 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சீனிவாசா நகரில் உள்ள ரேஷன் கடையில் பயோ மெட்ரிக் எந்திரத்தில் சர்வர் பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக காலை 9 மணிக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வந்த பொது மக்கள், 2 மணி நேரத்திற்கும் மேலாக  காத்திந்தனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் ரேஷன் கடைகள் முன்பு சாமியானா பந்தல் அமைக்கப்படாததால் வயதானவர்கள் 2 பேர் மயங்கி விழுந்தனர். நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த சிலர் ரேஷன் கடை ஊழியர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல் விழுப்புரம் தந்தை பெரியார் நகர், சாலாமேடு, என்.ஜி.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் எந்திரத்தில் ஏற்பட்ட சர்வர் பிரச்னை காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பை உடனுக்குடன் பெற முடியாமல் பொது மக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

விழுப்புரம் தந்தை பெரியார் நகர், சீனிவாசா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சர்வர் பிரச்னை ஏற்பட்டால் தற்சமயத்திற்கு நோட்டில் பதிவு செய்து விட்டு பொங்கல் பரிசு தொகுப்பை பொது மக்களுக்கு வழங்கும்படி ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பொது மக்களுக்கு வழங்கப்படும் பச்சரிசி, சர்க்கரை, 6 அடி நீள முழுக்கரும்பு முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

 

Tags:    

Similar News