விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணி துவங்க உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணியை உடனடியாக செயல்படுத்த ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.;
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நேற்று (10.06.2022) பள்ளிக்கல்வித்துறையின் மூலம், 2022 - 2023 ஆம் கல்வியாண்டில், பள்ளிகள் வரும் 13.06.2022 அன்று திறப்பதை முன்னிட்டு, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப்பணி முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உத்தரவிற்கிணங்க வரும் கல்வி ஆண்டிற்கு (2022-23) வரும் 13.06.2022 அன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. அதனையொட்டி நாளை (11.06.2022) அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை திறந்து நம் குப்பை - நம் பொறுப்பு என்ற திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும், பள்ளி வளாகத்திலுள்ள குப்பைகள் மற்றும் இலை சருகுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்திருத்தல், வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர் தேக்கத் தொட்டி மற்றும் மின் இணைப்புகள் ஆகியவற்றினை பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ள கிராம தூய்மை பணியாளர்கள், 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு அனைத்து பள்ளிகளிலும் துய்மை பணிகளை மேற்கொண்டு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அரசு அறிவுரையின்படி நடப்பு கல்வியாண்டில் அதிகளவு அரசு பள்ளிகளில் மாணாக்கர்கள் சேர்த்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மன மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்களால் பள்ளிகள் பார்வையிடப்படவுள்ளதை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள் வருகைப்புரிந்து உரிய பணியாளர்களைக் கொண்டு நாளை (11.06.2022) தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளை தூய்மையாக வைப்பதனை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி அனைத்து பள்ளிகளையும் தூய்மையாகவும் சுத்தமாகவும் வைப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பூ.காஞ்சனா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கொடி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.