விழுப்புரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
விழுப்புரம் அருகே காணை அருகே உள்ள சத்திப்பட்டு கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்
விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள சத்திப்பட்டு கிராமத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் ஆய்வாளர் ரேகாமதி தலைமையிலான போலீசார், அக்கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள ரமணா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு 50 கிலோ எடை கொண்ட 25 சாக்கு மூட்டைகளில் 1,250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை விழுப்புரம் வண்டிமேடு விராட்டிக்குப்பம் சாலை பகுதியை சேர்ந்த அகமது இப்ராஹிம் என்பவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விழுப்புரம் நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர். மேலும் அகமது இப்ராஹிம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.