‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரத்தில் பேச்சு

அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி இன்று ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் வந்திருந்தார் அப்போது அவர் தொண்டர்களிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் வரலாம் எனத் தெரிவித்தார்

Update: 2023-04-02 15:26 GMT

விழுப்புரத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

விழுப்புரத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வந்த அதிமுக  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடையே  நான்கு முனை சந்திப்பு அருகில் பேசியதாவது,

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா கட்சியை சிறப்பாக வழி நடத்தி, எடுத்துக்காட்டாக விளங்கினார். இருபெறும் தலைவர்களுக்குப் பிறகு, தற்போது பொதுச்செயலாளராக பதவி வழங்கி, பணியாற்றும் பொறுப்பை எனக்கு வழங்கிய உங்களுக்கெல்லாம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுகவை அழிப்பதற்கு, திமுகவினர் பல சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து, கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்கிறேன். தொண்டர்களின் எதிர்பார்ப்பை நல்ல முறையில் நிறைவேற்றுவேன்.

திமுகவோடு இணைந்து, சில சூழ்ச்சியாளர்களின் செயல்பாடுகளையும், வென்று, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கனவை நாம் நிறைவேற்றுவோம். திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுகவினர் மீது பல பொய் வழக்குகளை போட்டு வருகிறார். அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொண்டு வருகிறோம்.

தொடர்ந்து இன்று வரை பல சோதனைகளை சந்தித்து வருகிறோம். அதிமுகவின் சக்தி வாய்ந்த தொண்டர்கள் இருக்கும் வரை, யாராலும் எதுவும் செய்ய முடியாது. எத்தனை சோதனைகள் வந்தாலும், அதனை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுவோம். அதிமுகவை அழிக்க நினைத்தால், அது நடக்காது. பொது மக்களுக்கு சேவை செய்யவே அதிமுக தொண்டர்களை இறைவன் படைத்துள்ளார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதிமுக தனது மக்கள் பணியை தொடரும்.

சக்தி வாய்ந்த இயக்கத்தை யாராலும் சீண்டி பார்க்க முடியாது. வழக்குப் போட்டு சீண்டினால் கானல் நீராக மறைந்து போவார்கள். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் தூரம் வெகு தொலைவில் இல்லை.

வரும் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரலாம். அதனால் 2024 பார்லிமென்ட் தேர்தலுடன், சட்டசபைக்கும் தேர்தல் வரும். தமிழகத்துக்கான விடிவு காலம் தெரிகிறது. மீண்டும் பொற்கால ஆட்சி அமைய நாம் பாடுபடுவோம்.

இவ்வாறு பழனிசாமி பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் எம்.பி, ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Similar News