விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் சங்ககால உறைகிணறு கண்டுபிடிப்பு

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் சங்ககால உறை கிணறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2023-02-25 17:02 GMT

தென்பெண்ணை ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால உறைகிணறு.

விழுப்புரம் அருகே உள்ள பேரங்கியூர் மற்றும் பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் ரமேஷ், ரங்கநாதன், பட்ட ஆய்வு மாணவர்கள் இம்மானுவேல், கோபி மற்றும் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் ஆகியோர் மேற்புற களஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பூமியின் மேற்பரப்பில் 25-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் இருந்ததை கண்டறிந்தனர். அதில் 9 உறைகிணறுகள் நல்ல நிலையில் உள்ளன. மற்ற உறைகிணறுகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. தென்பெண்ணையற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பெரும் மண் அரிப்பு ஏற்பட்டதால் உறைகிணறுகள், பூமியின் மேற்பரப்பில் கண்டறியப்பட்டு உள்ளன.

இதுகுறுத்து பேராசிரியர்கள் கூறியதாவது:

இந்த உறைகிணறுகள் இரண்டு வகைகளாக உள்ளன. ஒன்று சொருகு வகை உறைகிணறு, மற்றொன்று அடுக்குவகை உறைகிணறு. பேரங்கியூர், பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணையாற்றில் கண்டறிந்த உறைகிணறுகள் அடுக்குவகையை சார்ந்தவை ஆகும். வறட்சியான காலங்களில் தண்ணீர் வற்றும்போது இந்த உறைகிணறுகள் அந்தக் காலத்து மக்களுக்கு தண்ணீர் தேவையை பெரிதும் பூர்த்தி செய்து வந்துள்ளது.

தண்ணீரை தெளியவைக்கவும், மணல் சரியாமல் இருக்கவும் இந்த அடுக்குவகை உறைகிணற்று அமைப்பை அந்தக் காலத்தில் ஏற்படுத்தி உள்ளனர். அவற்றில் இருந்து மக்கள் சுகாதாரமான குடிநீரை பெற்றனர். பேரங்கியூர், பிடாகம் குச்சிப்பாளையம் ஆற்றில் கண்டறியப்பட்ட. உறைகிணறுகள் சங்க காலத்தை சார்ந்ததாகும். இதன் மூலம் இந்தப் பகுதியில் சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர் என தெளிவாக அறியமுடிகிறது.

மேலும் இங்கே இருக்கின்ற உறைகிணறுகள் அழிவின் விளிம்பில் இருப்பதால் அதனை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். அரசு அருங்காட்சியகத்தில் இந்த உறைகிணறுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். தென்பெண்ணையாற்றில் சங்ககால நாகரீகம் சிறந்து விளங்கி இருக்கிறது. இதைப்பற்றிய தொல்லியல் ஆய்வுகள் இன்னும் செய்யப்படாமல் இருக்கிறது. அந்த ஆய்வுகள் நடத்தப்பட்டால் நடுநாட்டு பகுதியில் சங்ககால மக்களின் பண்பாடுகளை வெளிக்கொணரலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த ஆற்றுப்படுகையில் தொல்லியல்துறை சார்பில் ஆய்வு நடத்த வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று தென்பெண்ணை ஆற்று கரையோரம் உள்ள ஏனாதிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சங்க கால மக்கள் வாழ்ந்த பொருட்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதனால், அந்தப் பகுதியில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இதனை அரசு கவனத்தில் எடுத்து தென்பெண்ணை ஆற்று கரையோரப் பகுதிகளை அகழ்வாராய்ச்சி செய்தால் தமிழக மக்களின் நாகரிகம் வெளிப்படும் என மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News