ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்ற வேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய புதிய சட்டம் இயற்ற வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-08-04 14:47 GMT

பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்து இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டதால் பலரும் மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அவற்றைப் போக்கி ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு அண்மைக்காலங்களில் மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்த ஆன்லைன் சூதாட்டங்கள்,  சூதாட வரும் இளைஞர்களின் பணத்தை முற்றிலுமாக சுரண்டி, மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்து,  மீள முடியாத இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டனர்.  தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என  வலியுறுத்தியதன் பேரில், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து கடந்த நவம்பர் 21-ஆம் நாள் அவசர சட்டத்தை அதிமுக அரசு பிறப்பித்தது. அதன்பின் கடந்த பிப்ரவரி மாதம் சட்டம் நிறைவேற்றப்பட்டு, பிப்ரவரி 25-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. அச்சட்டம் தான் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கத்தை உயர்நீதிமன்றம் விமர்சிக்கவில்லை. அதன்மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்பதை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொள்கிறது. மாறாக, சில நுட்பமான காரணங்களின் அடிப்படையில் தான் இந்தச் சட்டத்தை செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்ய முடியாது; முறைப்படுத்துவதற்கு மட்டுமே முடியும் என்று கூறி ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இரு மனிதர்கள் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி, அதில் ஒருவர் வெற்றி பெறும் போது, அதில் திறமை மட்டுமே உள்ளது . ஆனால், ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் மறுபுறத்தில் ஆடுவது  மென்பொருட்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள். ஆன்லைன் ரம்மி விளையாடும் போது முதலில் ஒரு சில ஆட்டங்களில் மனிதர்கள் வெற்றி பெறுவர். அதனால் தொடர்ந்து வெற்றி பெறலாம் என்று பணம் கட்டி விளையாடும் போது, அவர்களுக்கு தோல்வியே பரிசாக கிடைக்கும். இவற்றை ஆதாரங்களுடன் விளக்கி, ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். 

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் கூட எந்த பயனும் கிடைக்காது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, புதிய சட்டம் இயற்றுவது தான் சரியான தீர்வு ஆகும். எனவே, சட்ட வல்லுனர்கள், தகவல் தொழில்நுட்பச் சட்ட வல்லுனர்கள் அடங்கிய வல்லுனர் குழுவை அமைத்து, அவர்களின் பரிந்துரை அறிக்கையைப் பெற்று அதனடிப்படையில் புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News