விக்கிரவாண்டி அன்பு ஜோதி ஆசிரமத்தில் தேசிய குழந்தைகள் ஆணையம் ஆய்வு
விழுப்புரம் அருகே குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் தேசிய குழந்தைகள் ஆணையம் ஆய்வு செய்தது.;
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாவட்ட அதிகாரிகளுடன் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
பின்னர் நிருபர்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விக்கிரவாண்டி குண்டலபுலியூர் அன்பு ஜோதி காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அந்த காப்பகத்தின் 2 அறைகளில் ஆவணங்களை காப்பதற்காக, சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி உள்ளேன். மாவட்டத்தில் 7 குழந்தைகள் நல காப்பகம் உள்ளது. அதில் 2 மனநல காப்பகமாகும். அதில் ஒன்று குண்டலப்புலியூர் காப்பகம். அங்கு நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் காப்பகங்களில் பாதுகாப்பு மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இந்த அன்பு ஜோதி காப்பகத்தில் நடந்த தவறுகள் குறித்து போலீஸ் விசாரணை செய்ய வேண்டி உள்ளது. இது தொடர்பாக டி.எஸ்.பி. தலைமையில் குழு அமைத்து, 7 நாள்களில் ஆய்வு செய்து தகவல் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளோம்.
இந்த காப்பகத்தில் 35 ஆயிரம் வகையான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து எப்படி கொண்டு வந்தார்கள் என தெரியவில்லை. இதனை விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம்.
காப்பகத்தில் ஒரு டார்க் ரூம் வைத்துள்ளனர், அதில் மதமாற்றம் செய்வதற்கு சில விஷயங்களை அவர்கள் செய்துள்ளனர். அதேபோல் காப்பகத்தில் இருந்து 15 பேர் காணாமல் போய் உள்ளனர். அவர்களின் நிலை குறித்தும், அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். இது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வருவதால், விசாரணையை முடித்து தகவல் கொடுப்பதாக கூறியுள்ளனர்.
இந்த தகவல்கள் முழுமையாக பெறப்பட்டு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்போம். இந்த காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட பலர் நல்ல முறையில் குணமடைந்துள்ளனர்.
இந்தக் காப்பகத்தில் இருந்ததில் 10 சதவீதம் பேர்தான் மனநலம் பாதித்தவர்களாக இருந்துள்ளனர். போதை மருந்து கொடுத்ததன் காரணமாக அவர்கள் மனநிலை பாதித்துள்ளனர். மோசமான நிலையில் காப்பக கட்டடம் இருந்துள்ளது. அங்கு குரங்கு போன்றவற்றை அடைத்து வைத்துள்ளனர். இவற்றையெல்லாம் தனி ஒருவரால் செய்ய வாய்ப்பில்லை. டி.ஆர்.ஓ., தலைமையிலான குழு அமைத்து, இது போன்ற காப்பகங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த காப்பகம் தொடர்பாக, அதிகாரிகள் ஏன் ஆய்வு செய்யவில்லை, விசாரிக்கவில்லை என அவர்களுக்கும் விளக்கம் கேட்டுள்ளோம். அந்த அறிக்கை வந்த பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறினார்.