விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரியும், 161-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும், தொடர்ச்சியாக நடந்து வரும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்காத மாநில அரசை கண்டித்தும், தமிழ் தேசிய ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மண்டல செயலாளர் விக்ரம் தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் சக்திவேல், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, கள்ளக்குறிச்சி மகளிர் பாசறை செயலாளர் ரஜியமாபாபு, விழுப்புரம் தொகுதி இணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் செல்வம், சுகுமார், பூபாலன், முனுசாமி, விஜயலட்சுமி, ஆனந்தபாபு, ராஜகணபதி, சோபின், விழுப்புரம் தொகுதி தலைவர் தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் தொகுதி செயலாளர் முனுசாமி நன்றி கூறினார்