மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி தள்ளுபடி அமைச்சர் பொன்முடி பேச்சு
விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி கடனுதவி தள்ளுபடி செய்ய உள்ளதாகக் கூறினார்
விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிகுழுவினருக்கு கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை வார விழாவில் அமைச்சர் பொன்முடி பேசினார்.
விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை வகித்தார். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகள், கேடயங்களையும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றுந் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில், அமைச்சர் பொன்முடி பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது 561 கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது. கூட்டுறவே நாட்டுயர்வு என்பதால் இத்தகைய சங்கங்கள் மாவட்டத்தில் மேலும் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும். இதற்கு உள்ளாட்சி நிர்வாகங்களில் பொறுப்பு வகிப்பவர்கள் சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, கடந்த 2021-ம் ஆண்டில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்ற 12 லட்சத்து 55 ஆயிரத்து 233 பயனாளிகளுக்கு 4 ஆயிரத்து 818 கோடியே 88 லட்சம் ரூபாய்க்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 19,805 பயனாளிகள் 85 கோடியே 2 லட்சம் ரூபாய்க்கு தள்ளுபடி பெற்று பயனடைந்தனர். விவசாயிகளுக்கு பயிர்கடன் மேலும், மாவட்டத்தில் ஆயிரத்து 840 மகளிர் குழுக்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 123 உறுப்பினர்கள் பெற்றுள்ள 27 கோடியே 76 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல், 2021 ஆம் ஆண்டில் கூட்டுறவு கடன் சங்கங்களில் 65 ஆயிரத்து 410 விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 450 கோடியே 38 லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் இதுவரை 8 லட்சத்து 44 ஆயிரம் விவசாயிகளுக்கு 6 ஆயிரத்து 341 கோடியே 89 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மண்டலத்தில் கடந்த ஆண்டில் 86 ஆயிரத்து 417 விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட் டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 50 ஆயிரத்து 63 விவசாயிகளுக்கு 349 கோடியே 39 லட்சம் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து விவசாய நிலங்கள் இல்லாதவர்களுக்கு கால்நடை வளர்ப்புக்காக வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் மத்திய கால முதலீட்டுக்கடன், பொதுநகைக்கடன், மாற்றுத்திறளாளிகளுக்கு கடன், சிறுவணிகக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன் உள்ளிட்டவைகளுக்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய திட்டங்கள் மூலம் மக்கள் முன்னேற்றமடைய வேண்டும். அதேபோல் வாங்கும் கடன்களை முறையாக செலுத்தி கூட்டுறவுச் சங்கங்கள் வளர்ச்சி பெறவும் ஒத்துழைக்க வேண்டும். பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், ஏழைகளுக்கு கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 2,307 பயனாளிகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் மூலம் 9 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கி பேசினார்.
விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், ஊராட்சி குழு துணை தலைவர் ஷீலா தேவி சேரன், விழுப்புரம் நகர மன்ற தலைவர் சக்கரை தமிழ்ச்செல்வி பிரபு, கோலியனூர் ஒன்றிய குழு தலைவர் சச்சிதானந்தம், கூடுதல் சப்-கலெக்டர் சித்ராவிஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.பரமேஸ்வரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள், உறுப்பினர்கள், பயனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி வரவேற்றார். மண்டல இணைப்பதிவாளர் ச.யசோதாதேவி திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். முடிவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சார்பதிவாளர் ப.கண்ணன் நன்றி கூறினார். முன்னதாக மத்திய கூட்டுறவு வங்கி நடமாடும் வங்கி சேவைக்கான வாகனத்தை அமைச்சர் பொன்முடி கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.