செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைச்சர் மஸ்தான் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Update: 2022-11-17 14:29 GMT

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆன்லைன் முறை கொள்முதலுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், விவசாயிகள் எடுத்து வரும் தானியங்களை வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த முறை மாற்றி அமைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக விலை போட்டு கொள்முதல் செய்திட அரசு உத்தரவிட்டுள்ளது. புதன்கிழமை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், ஆன்லைன் முறை கடைபிடிக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் செய்யவும் மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் செஞ்சி போலீசார் அங்கு விரைந்து வந்து, போராட்டம் நடத்திய விவசாயிகளை சமாதானம் செய்தனர். மேலும், அங்கிருந்த அதிகாரிகள், வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடனடியாக சுமூக தீர்வு  இதையடுத்து, வியாபாரிகளுடனான இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டுவர வேண்டாம் என செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செஞ்சி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று விற்பனை கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து தேசிய இணையதள வேளாண் விற்பனை சந்தை கூட விற்பனையை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன், செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், சென்னை வேளாண் விற்பனை மற்றும்  வேளாண் வருமான வரி கூடுதல் இயக்குனர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி திண்டிவனம் அரகண்டநல்லூர் உள்ளிட்ட பல்வேறு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இந்த தேசிய இணையதள வேளாண் விற்பனை குறித்து வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பிரச்சனைகள் எழுந்த வண்ணம் உள்ளதால் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் இந்த பிரச்சனையை சரி செய்வது தெரியாமல் தற்போதைய நிலையில் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மாவட்ட ஆட்சியர் இது விஷயத்தில் தலையிட்டு சுமூகமான நிலை ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News