புதிய வீடு கிரையம் என்ற பெயரில் மோசடி: ஒருவர் கைது
விழுப்புரத்தில் புதிய வீட்டை விற்பனை செய்வதாக கூறி ரூபாய் 41 லட்சம் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்;
விழுப்புரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 44). இவர் விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலையில் வசிக்கும் ஹரிசங்கர் என்பவரிடமிருந்து புதியதாக கட்டிய வீட்டை கிரையம் செய்வதற்காக ரூ.40 லட்சத்திற்கு விலைபேசி ரூ.20 லட்சத்துக்கு கிரைய உடன்படிக்கை பத்திரம் எழுதி முன்பணமாக ரூ.20 லட்சத்தை கொடுத்துள்ளார். அந்த பத்திரத்தில் ஹரிசங்கரின் மனைவி சித்ரா சாட்சி கையொப்பமிட்டுள்ளார்.
பின்னர் ஹரிசங்கருக்கு சொந்தமான வீட்டை கிரையம் செய்ய சீனிவாசன் அழைத்துள்ளார். அதற்கு அவர், தனது நண்பரின் வீடு மீது வங்கி கடன் இருப்பதால் கடனை அடைத்தால்தான் வீட்டை கிரையம் செய்ய முடியும் என்று கூறியதால் வங்கி கடனை அடைக்க சீனிவாசனின் வங்கி கணக்கிலிருந்து ஹரிசங்கரின் வங்கி கணக்கு எண்ணிற்கு ரூ.17 லட்சத்தை அனுப்பியுள்ளார். மீண்டும் ஹரிசங்கர் பணம் தேவைப்படுவதாக கூறியதால் ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்தை நேரடியாக ஹரிசங்கரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் சீனிவாசனுக்கு அந்த வீட்டை கிரையம் செய்து கொடுக்காமலும், ரூ.41 லட்சத்து 2 ஆயிரத்தை திருப்பிக்கொடுக்காமலும் ஹரிசங்கர், சித்ரா ஆகிய இருவரும் ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து சீனிவாசன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஹரிசங்கர், சித்ரா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிசங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.