விழுப்புரத்தில் பயன்பாடு இன்றி பாழடைந்த சமுதாயக்கூடம்
விழுப்புரம் கமலா கண்ணப்பா லேஅவுட் அருகே பயன்பாடு இன்றி பாழடைந்து கிடக்கும் சமுதாயக்கூடத்தை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை
விழுப்புரத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கூடம் கடந்த 11 ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது. அதனை பயன்பாட்டுக்கு வருமா என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 25-வது வார்டில் உள்ள கமலா கண்ணப்பன் நகர், கோவிந்தசாமி நகர், பாலசுப்ரமணியன் நகர், மற்றும் நடராஜர் லேஅவுட் என பல்வேறு வீதிகள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தன் சமுதாயகூடம் கட்டுவதற்கு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கினார். இதையடுத்து சமுதாய கூடம் கட்டப்பட்டு கடந்த 4- 12 -2011 அன்று அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகத்தால் திறக்கப்பட்டது.
ஆனால் திறந்த நாள் முதல் இன்று வரை அந்த சமுதாயகூடம் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. தற்போது இப்பகுதி சுகாதார சீர்கேடு மிகுந்து நடந்து செல்ல முடியாத அளவிற்கு சேறும் சகதியமாக உள்ளது. வெறும் காட்சி பொருளாக இருக்கும் சமுதாயக்கூடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மக்களின் கோரிக்கை அறிந்து ஆட்சியர் மோகன் சமுதாய கூடத்தை உடனடியாக திறக்க உத்தரவிட்டார். ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. ஆட்சியர் உத்தரவிட்டும் திறக்கப்படாமல் இருப்பது என்ன காரணத்தினால் சமுதாயக் கூடம் திறக்கப்படவில்லை என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
உடனடியாக அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சமுதாயகூடத்தை திறந்து சீரமைத்து பயன்பாட்டிற்கு விட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இதேபோன்று பல்வேறு ஊராட்சிகளில் கட்டப்பட்ட சமுதாயக்கூடங்களில் சில மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மீதி உள்ள பல சமுதாயக் கூடங்கள் பயன்பாடு இன்றி பாழடைந்து வருகிறது. மேலும், அரசு கிராமப்புறங்களில் கட்டுகின்ற ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் மற்றும் சேவை மையக் கட்டிடங்கள் போன்ற பல்வேறு அரசு கட்டிடங்கள் மக்கள் பயன்படுத்தும் இடங்களில் கட்டாமல் எங்கு கட்டப்பட்டுள்ளது என்று தெரியாமலேயே கட்டி முடித்து விடுகின்றனர்
அதனால் பல அரசு கட்டிடங்கள் கடமைக்காக மட்டுமே கட்டப்பட்டு பூட்டியும் பயன்பாடு இன்றி பல இடங்களில் கிடக்கிறது. அதனால் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் மற்றும் சேவை மையங்கள் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டில் உள்ளனவா என கண்காணித்து ஆய்வு செய்து,மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை கிடப்பில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.