தலைவர்கள் சிலை வைப்பதில் பிரச்சினை-கண்டமங்கலத்தில் போலீஸ் குவிப்பு
கண்டமங்கலம் பகுதியில் தலைவர்கள் சிலை வைப்பதில் மோதல் ஏற்பட்டதால் போலீஸ் படை குவிக்கப்பட்டது.
புதுச்சேரி–விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம்,கண்டமங்கலத்தில் காந்தி, அண்ணா மற்றும் அம்பேத்கர் சிலைகள் இருந்தது. விழுப்புரம்–-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுவதால் சிலைகளை வேறு இடத்துக்கு மாற்றும் ஏற்பாடுகள் நடந்தது.
புதிதாக கட்டப்பட்ட பீடத்தில் 3 சிலைகளும் வைக்கும் பணி நேற்று நடந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை அங்கு திரண்ட பா.ஜ.க. வினர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிலை அமைக்க இடம் பிடித்து தங்கள் கட்சிக்கொடியை நட்டு வைத்தனர். அதேபோல் பா.ம.க. வினர் மறைந்த வன்னியர் சங்க தலைவர் குருவிற்கு சிலை வைக்க வேண்டும் என தங்கள் கட்சிக்கொடியை நட்டு வைத்து இடம் பிடித்தனர்.
இந்த நிலையில் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர்கள் கண்ணன், ராமதாஸ் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க., வினர் அங்கு வந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரின் சிலை அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கணேசன், ஒன்றிய சேர்மன் ஆர்.எஸ் வாசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் டி.எ்ன்.ஏ., தமி்ன் மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் அங்கு திரண்டனர்
அப்போது தி.மு.க., மற்றும் பா.ஜ.க, பா.ம.க. வினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க டி.எஸ்.பி. மித்திரன், இன்ஸ்பெக்டர்கள் ரத்தினசபாபதி, செல்வராஜி ஆகியோர் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், வருவாய் ஆய்வாளர்கள் சாந்தி, மாயாவதி ஆகியோர் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேசிய நெடுஞ்சாலைகளில் புதிதாக தலைவர்கள் சிலை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உங்கள் கோரிக்கை குறித்து விழுப்புரம் ஆர்.டி.ஓ., விடம் மனு அளிக்கலாம். அனுமதி கிடைத்தால் மட்டுமே சிலை வைக்க இயலும் என தெரிவித்தனர். அரசியல் கட்சியினர் தலைவர்கள் சிலை அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள் அங்கு பேசி முடிவு மேற்கொள்ளலாம் என தெரிவித்தனர். தலைவர்கள் சிலை வைக்க இடம் பிடிப்பதில், கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் ஒரு தலைவரின் சிலை அவமதிக்கப்பட்ட போது இதேபோன்று பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அந்தப் பிரச்சனையை மாவட்ட காவல்துறை சுமூகமான நிலையில் கொண்டு வந்தது. தற்போது அதேபோன்று தலைவர்களுக்கு சிலை வைப்பதில் இடத்திற்கான பிரச்சனை ஏற்பட்டுள்ளது இதனை காவல்துறை, நிர்வாக துறை சமாதான பேச்சு வார்த்தை மூலம் நடவடிக்கை எடுக்க முயன்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.