விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 11- ந்தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமும், காலாண்டுதோறும் பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 11.03.2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 5,497 மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு வேண்டி பதிவு செய்துள்ளனர்.
இம்மனுதார்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு நேர்வாக மாற்றுத்திறனாளி மனுதாரர்களை தேர்வு செய்யும் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொள்ளவுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 18 வயது முதலான மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.
தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது,தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் மற்றும் சுய விவர குறிப்புகளுடன் (BIO-DATA) முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.