ரஜினி கபாலியா, காவிக்கு பயந்தவரா? கே.எஸ்.அழகிரி கேள்வி
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ரஜினி கபாலியா, காவிக்கு பயந்தவரா? என கேள்வி எழுப்பினார்.;
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.
விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி பங்கேற்றார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் நாட்டின் சுதந்திரத்துக்காக காங்கிரஸ், சோசியலிஸ்ட், இடதுசாரி உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் பாடுபட்டனர். இதுவரை சுதந்திர தினத்தை தொடர்ந்து காங்கிரசும் பிற கட்சிகளும் கொண்டாடி வருகின்றன.
ஆனால், பா.ஜ.க.வின் முன்னோடியான ஜன சங்கமோ அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்போ சுதந்திரத்துக்காக போராடவில்லை. நாடு சுதந்திரம் அடைந்தப்பின் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் காவிக்கொடி மற்றும் தேசியக்கொடியை ஏற்றிவைத்தனர். பின்னர் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது அங்குச் சென்று தேசிய கொடியை ஏற்றினார்.
நாட்டின் சுதந்திரத்துக்கு எதிரான கொள்கையை உடையவர்களாகவே பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இருந்தனர். இவ்வளவு காலம் ஏன் சுதந்திர தினத்தை அவர்கள் கொண்டாடவில்லை. தேசிய கொடிக்கு பின்னால் காங்கிரசாரின் தியாகம் இருக்கிறது. தேசிய கொடியை இப்போது ஏற்றும் பா.ஜ.க, தேசிய கொடிக்கு பின்னால் இருக்கும் தியாகத்தை மட்டும் மறைக்க முயற்சிக்கிறது.
75 ஆண்டுகளாக சுதந்திர தினத்தை காங்கிரஸ் கொண்டாடி வருகிறது. இப்போதாவது பா.ஜ.க. சுதந்திர தினத்தை கொண்டாடுகிறதே என்பதில் மகிழ்ச்சி தான்.ஆகஸ்டு15ஆம் தேதி தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஜிம்கானா கிளப் பின் பகுதியில் உள்ள காமராஜர் சிலை வரை மிகப்பெரிய பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகையின்போது அரசின் விளம்பர பதாகைகளில் மோடி படத்தை ஒட்டும்போது தமிழக அரசு அமைதி காத்தது. பின்னர் மோடி புகைப்படத்தின் மீது கரி பூசிய பெரியார் திக தொண்டர்களை காவல்துறை கைது செய்தது. இதை காங்கிரஸ் கண்டித்தது. சொத்து வரி உயர்வு செய்யப்பட்டபோது முதல் ஆளாக எதிர்ப்பு அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ் தான். தி.மு.க. ஆட்சியில் ஏதாவது தவறு நடந்தால் காங்கிரஸ் தான் முதல் ஆளாக சுட்டிக்காட்டி வருகிறது.
ஆளுநர் நியமனத்தில் எப்போதுமே பின்புலம் இருக்கும். ஜனநாயக வளர்ச்சிப்பெற்ற தமிழகம் போன்ற மாநிலங்களில் படித்த, பண்புள்ளவர்களை ஆளுநர்களாக நியமிப்பதும், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் ராணுவ பின்புலம் கொண்டவர்களை நியமிப்பதும் வழக்கமான நடைமுறை. ஆனால், உளவுத்துறை பின்புலம் கொண்ட ஆளுநரை தமிழகத்தில் நியமித்தததால் தான் எதிர்ப்பு தெரிவித்தோம்.
தமிழக மக்கள் மீது பிரியமாக இருப்பதாகவும், தமிழர்களுக்காக எதையும் செய்யத்தயாராக இருப்பதாகவும், அரசியல் பேசினோம், ஆனால், என்ன பேசினோம் என தெரிவிக்கமாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தபின் நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கு தமிழக மக்களின் நலனில் அக்கறை இருந்தால் வரவேற்றோம். நீட் தேர்வு இம்மாநிலத்துக்கு ஒத்துவரவில்லை. மத்திய பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 90 சதவீதம் மாநில பாடத்திட்டம் தான் பின்பற்றப்படுகிறது.
மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்துவிட்டு நீட் தேர்வு எழுதுவது கடினம் என்பதால்தான் தமிழகத்தில் நீட் தேர்வை காங்கிரஸ் எதிர்க்கிறது. தமிழகத்தில் 6-ஆம் வகுப்பு முதல் சி.பிஎ.ஸ்.இ. பாடத்திட்டமாக மாற்ற குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆகலாம். அதற்குப்பின் வேண்டுமானால் நீட் தேர்வை அமல்படுத்தலாம்.
நீட் தேர்வை காங்கிரஸ் மட்டுமன்றி ஜெயலலிதா கூட எதிர்த்தார். இது அரசியல் காரணத்துக்காக அல்ல. மாணவர்களின் எதிர்காலம், தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்னை என்பதால்தான் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருக்கிறது. நீட் தேர்வு ரத்து மசோதாவில் கையெழுத்திடும்படி ஆளுநர் சந்திப்பின்போது ரஜினி அழுத்தம் கொடுத்திருந்தால் தமிழக அரசியல் கட்சிகள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். தமிழ் மக்களால் வளர்க்கப்பட்டவர் ரஜினி என்பதால் இதுபோல வலியுறுத்தியிருக்கலாம்.
கபாலியை யாரும் மிரட்ட முடியாது. தான் கபாலியா அல்லது காவிக்கு பயந்தவரா என்பதை ரஜினி தான் விளக்க வேண்டும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 10 ஆண்டுகளில் 120-க்கும் குறைவான அமலாக்க சோதனைகள் தான் நடந்தன. மோடியின் 7 ஆண்டு கால ஆட்சியில் 3,000-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை சோதனை நடந்துள்ளன. மோடிக்கு எதிராக கருத்துக்கூறினால் அமலாக்கப்பிரிவு சோதனை நிச்சயம் வரும் என்றார்.
முன்னதாக விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.டி.வி.சீனிவாசகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற சுதந்திர தின பவள விழா பேரணி, விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து நான்குமுனை சந்திப்பு வரை நடந்தது. இதில் அழகிரி, கட்சியின் மாநில பொதுச்செயலர் சிரஞ்சீவி, மாநில துணைத் தலைவர் குலாம் மொய்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.