பொதுத்தேர்வு ஏற்பாடுகளில் தீவிரம் கவனம்; கல்வித்துறை அதிகாரிகளுக்கு, ஆட்சியர் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில், நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் தலைமையில் நடந்தது.

Update: 2023-03-04 14:47 GMT

விழுப்புரம் மாவட்டத்தில், பொதுத்தேர்வு ஏற்பாடுகளில், மாவட்ட நிர்வாகம் தீவிரம். ( கோப்பு படம்)

விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்,  ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியர் பழனி பேசியதாவது,

விழுப்புரம் மாவட்டத்தில், பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு வருகிற 13-ந் தேதி முதல் 3.4.2023 வரை நடைபெறவுள்ளது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 47 தேர்வு மையங்களும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 101 தேர்வு மையங்களில் 189 பள்ளிகளை சேர்ந்த 11,623 மாணவர்களும், 11,451 மாணவிகளும் என மொத்தம் 23,074 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

பிளஸ்-1 பொதுத்தேர்வு வருகிற 14-ந் தேதி முதல் 5.4.2023 வரை நடைபெறவுள்ளது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 47 தேர்வு மையங்களும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களும் என 101 தேர்வு மையங்களில் 193 பள்ளிகளை சேர்ந்த 10,557 மாணவர்களும், 11,300 மாணவிகளும் என மொத்தம் 21,857 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு 6.4.2023 முதல் 20.4.2023 வரை நடைபெறவுள்ளது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களும் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 65 தேர்வு மையங்களும் என மொத்தம் 121 தேர்வு மையங்களில் 364 பள்ளிகளை சேர்ந்த 13,006 மாணவர்களும், 12,621 மாணவிகளும் என மொத்தம் 25,627 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

இத்தேர்விற்கு 8 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 5 விடைத்தாள் சேகரிப்பு மையங்களும், 28 மேல்நிலை விடைத்தாள் எடுத்துச்செல்லும் வழித்தடங்களும், 34 இடைநிலை மையங்களுக்கு விடைத்தாள் எடுத்துச்செல்லும் வழித்தடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திடவும், தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களில் ஒருவர் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாள்கள் செல்வதை உறுதி செய்தல், விடைத்தாள்களை காப்பு மையங்களுக்கு கொண்டு செல்வதில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் பள்ளிக்கல்வித்துறை மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தவும், தேர்வு மையங்களில் சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர்கள் கிருஷ்ணன், சிவசுப்பிரமணியம், செல்வராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News