வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல்: அறநிலையத்துறை நடவடிக்கை

விழுப்புரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மற்றும் வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் வாடகை செலுத்தாத கடை மற்றும் வீட்டிற்கு சீல் வைத்தனர்.

Update: 2023-03-18 11:14 GMT

கோப்புப்படம்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டு அவை அறநிலையத்துறை வசம் கொண்டு வரப்பட்டு வருகின்றன. அதுபோல் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வாடகைகளை வசூலிக்கும் பணியிலும் அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் திரு.வி.க. வீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 22 கடைகளும், 6 குடியிருப்புகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை தொகையை செலுத்தாமல் ரூ.1 கோடி வரை பாக்கி வைத்திருந்தனர். எனவே வாடகை தொகையை உடனடியாக செலுத்தும்படி பலமுறை சம்பந்தப்பட்டவர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு சீல் வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினர். அதன் பிறகு சிலர், தானாக முன்வந்து வாடகை தொகையை படிப்படியாக செலுத்தி வருகின்றனர்.

அந்த இடத்தில் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தவர் ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்து 136-ஐ செலுத்தாமல் பாக்கி வைத்திருந்ததால் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயராணி தலைமையில், விழுப்புரம் சரக ஆய்வாளர் லட்சுமி, கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், பரம்பரை அறங்காவலர் குமார், கணக்கர் சிவஜோதி ஆகியோர் வருவாய்த்துறையினர், காவல்துறையினர் முன்னிலையில் அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோல் விழுப்புரம் ஸ்ரீவைகுண்டவாச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான குடியிருப்பில் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 260 வாடகை பாக்கி வைத்திருந்த குடியிருப்பையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். 

இதேபோன்று விழுப்புரம் மாவட்டம், பனையபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்து சமய அறநிலைத்துறை சொந்தமான கோயில்களின் இடங்களை ஆக்கிரமித்து பலர் பல்வேறு கட்டிடங்களைக் கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்தும் கடைகள் நடத்தியும் வருகின்றனர். அவர்கள் இந்து சமய அறநிலைத்துறையை ஏமாற்றும் வகையில் வாடகை பாக்கி வழங்காமல் இருந்து வருகின்றனர், அதனால் இது போன்ற நடவடிக்கைகளை மாவட்டம் முழுக்க இந்து சமய அறநிலைத்துறை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.

இதுபோன்ற நடவடிக்கையில் எடுக்கும் போது அங்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் அரசியல் பின்புலத்துடன் பல்வேறு தடைகளை ஏற்படுத்தலாம் அதனை எல்லாம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் ஆக்கிரமிப்பு இடங்களை கைப்பற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் என பக்தர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News