விழுப்புரம் சுகாதாரத்துறையின் மெத்தனம்... எத்தனை உயிர் பலியாகுமோ...?
விழுப்புரம் மாவட்டத்தில் சுகாதாரத்துறையினரின் அலட்சியத்தால் உயிர்களை இழப்பதற்கு முன் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் இருக்கும் கொரானா நோயாளிகளுக்கு சுய உதவி குழு நடத்தும் உணவகத்தில் இருந்து உணவு பார்சல் அனுப்பிய கங்கா என்ற பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு கொரானா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் வணிக வளாகத்தில் உள்ள அந்த உணவகத்தை சுத்தம் செய்யவில்லை. அங்கு உணவு பார்சல் செய்பவர்களை பரிசோதனை கூட செய்யவில்லை. மகளிர் சுய உதவிக்குழு தயாரிக்கும் உணவுகளை வாங்கி தற்போது வரை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
இதுபற்றி அறிந்த கொரானா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நபர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். சுகாதாரத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மருத்துவமனைக்கு உணவு விநியோகம் செய்த கங்கா, கடந்த சனிக்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சுண்டல் மற்றும் ஸ்னாக்ஸ்களை அரசு அலுவலர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கொடுத்துள்ளார். அவர் கொரானா பாதிப்பால் அன்று இரவு இறந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத்துறையின் இதுபோன்ற மெத்தனப்போக்கால் எத்தனை உயிர்கள் பலிபோகுமோ தெரியவில்லை. எனவே இதுபற்றி மாவட்ட ஆட்சியர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் உயிர் பலிகளை தடுக்கலாம் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.