ஏரிவாய்க்கால் சீரமைக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Farmers Protest News -திருக்கோவிலூர் அருகே ஏரிவாய்க்காலை சரி செய்ய வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Farmers Protest News -விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து பிரிந்து பரனூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்பட்டு வருகிறது.
வறட்சிக்காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஏரிக்கு செல்லும் வாய்க்காலை முறையாக பராமரிக்காததால் அந்த வாய்க்கால்கள் தூர்ந்துபோய்விட்டன. தற்போது பெய்த தொடர் மழையினால் ஆற்றின் இரு கரையை தொட்டவாறு தண்ணீர் சென்றாலும் ஏரிக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வரத்து இல்லை.
எனவே இந்த வாய்க்காலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள், விவசாயிகள் தொடர்ந்து பலமுறை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்தனர். இருப்பினும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்காததால் இனி வரவிருக்கும் மழைக்காலத்திற்குள்ளாவது பரனூர் ஏரி வாய்க்காலை சீரமைக்கக்கோரி
மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் லோகநாதன் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெயராமன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அம்பலவாணன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோலாகலன், சதீஷ், தீனதயாளன், ஜெயராமன், ஜெயவேல் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2