விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் பணம் பட்டு வாடா- இயக்குனர் எச்சரிக்கை

விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் பணம் பட்டுவாடா செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குனர் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2022-10-31 10:54 GMT
விழுப்புரத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை இயக்குனர் நடராஜன் பேசினார்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்று வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வேளாண் வணிகம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேளாண் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் பேசும்போது  கூறியதாவது:-

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் விவசாயத்தை அடிப்படை ஆதாரமாக கொண்ட மாவட்டங்களாக உள்ளன. விவசாயிகள் சாகுபடி செய்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வரும் விளைபொருட்களுக்கு உரிய பணத்தை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சரியான முறையில் செயல்பட வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை பெற்றுக்கொண்டு உரிய பணத்தை காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் வழங்க வேண்டும். அவ்வாறு காலம் தாழ்த்தி பணம் வழங்கப்படுவதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதன் குறியீட்டினை எட்டவில்லை என தெரிகிறது. எனவே வரும்காலங்களில் தகுந்த குறியீட்டினை எட்ட வேண்டும். அதுபோல் எந்தவித இடைத்தரகர்களும் இல்லாமல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஏதேனும் இடைத்தரகர்கள் சம்பந்தமாக புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 உழவர் சந்தையை பொறுத்தவரை விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் ஆகியவற்றை நேரடியாக விற்பனைக்கு கொண்டு வந்து வணிகம் செய்யக்கூடிய ஒரு தளமாக திகழ்கிறது. இதனால் விவசாயிகளும் வணிக ரீதியாக பயனடைகிறார்கள். பொதுமக்களும் நல்ல விளைப்பொருட்களை பெறுகிறார்கள். உழவர் சந்தைகளை நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தொடர்ந்து விவசாயிகளுக்கு விற்பனை பொருளுக்கு பணம் வழங்குவதில் பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது, இந்நிலையில் வேளாண் விற்பனை வணிகவரி இயக்குநர் நடராஜன் விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வரும் பொருளுக்கு உடனடியாக பணம் வழங்காமல் இது நாள் வரை காலம் கடத்தி வழங்கி வந்தனர். இதனால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த கூட்டத்தின் செய்தி விவசாயிகளுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் பலர் தெரிவித்து சென்றனர்.

Tags:    

Similar News