உழவா் பாதுகாப்பு அட்டை வழங்க, விழுப்புரத்தில் விவசாயிகள் கோரிக்கை
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மோகன் தலைமையில், விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பேசியதாவது;
பயிா்க் காப்பீட்டில் வெளிப்படைத் தன்மை இல்லை. விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில், மாவட்ட அளவில் தகவல் மையத்தை ஏற்படுத்த வேண்டும். கடந்தாண்டு பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை. பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டத்தில் விவசாயிகளுக்கு முறையாக உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொண்டால் அவா்கள் கைப்பேசியை எடுப்பதில்லை. விவசாயிகள், விவசாய நிலங்கள் குறித்த சரியான புள்ளி விவரங்கள் இல்லாமல் கணக்கெடுத்து, பயிா்க் காப்பீடு செய்யக் கூறுகிறாா்கள்.
மேலஒலக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் தரமில்லாத வகையில் கட்டப்படுகிறது. மேலஒலக்கூா் புது காலனி குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்து விடுகிறது. இதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உழவா் பாதுகாப்பு அட்டை வழங்கப்பட்டது. இதன் மூலம் அவா்கள் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை போன்றவற்றை பெற்று வந்தாா்கள். ஆனால், தற்போது மாவட்டத்தில் உழவா் பாதுகாப்பு அட்டை இல்லாத விவசாயிகள் அதிகளவில் உள்ளனா். எனவே, கிராம நிா்வாக அலுவலா்கள் மூலமாக முகாம் நடத்தி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு உழவா் பாதுகாப்பு அட்டை வழங்க வேண்டும். அனைத்துக் கிராமங்களிலும் இடிதாங்கிகள் அமைக்கப்பட வேண்டும்.
பருவ மழைக் காலங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்க வழியில்லை. குறிப்பாக, தென்பெண்ணை ஆற்றில் போதிய தடுப்பணைகள் இல்லாததால், மழைநீா் வீணாகக் கடலில்தான் கலக்கின்றன. எனவே, தடுப்பணைகளைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் அருகே கிளியனூரில் தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டு 3 ஆண்டுகளாகிறது. அதைச் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
வானூா் வட்டம், புதுகுப்பம் பகுதியில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகளின் நலன்கருதி, இப்பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
பொதுநலன் சாா்ந்து கலெக்டரை சந்திக்க வந்து, பணி காரணமாக அவா் வெளியே சென்ற நிலையில், மாவட்ட வருவாய் அலுவலரை சந்திக்க முடியாத நிலை உள்ளது.
விக்கிரவாண்டி வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் பழையக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. விதை கிடங்கு அலுவலகம் வேறு இடத்தில் உள்ளது. வேளாண் உதவி இயக்ககத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும். விக்கிரவாண்டி பகுதியில் 10,000 ஏக்கரில் விவசாயிகள் காராமணி சாகுபடி செய்துள்ளனா். ஆனால் அவற்றுக்கு உரிய விலை கிடைப்பதில்லை, இவ்வாறு அவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
தொடா்ந்து அதற்கு பதிலளித்து கலெக்டர் மோகன் பேசியதாவது;
எல்லீஸ்சத்திரம் தடுப்பணை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக நல்ல மழை பெய்தது. தடுப்பணை உடைந்தபோது, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில், எல்லீஸ்சத்திரம் பகுதியில், ரூ.25 கோடியில் தடுப்பணைப் பணிகள் மேற்கொள்ள நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் முதியோா் உதவித் தொகை தகுதியுள்ளவா்களுக்கு வழங்கப்படும். முதியோா் உதவித் தொகை வழங்குவதில் கடுமை காட்ட வேண்டாம் என தமிழக முதல்வா் கூறியிருக்கிறாா். எனவே, மாவட்டத்தில் உரிய தகுதி உடையவா்களுக்கு முதியோா் உதவித் தொகை வழங்கப்படும்.
விவசாயிகளை அதிகாரிகள் சந்தித்து பேசினாலே, பல பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்பட்டு விடும். இனி வரும்காலங்களில் விவசாய சங்கத் தலைவா்கள், கலெக்டர் உள்ளிட்ட அலுவலா்களை சந்தித்து பேசலாம்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பரமேசுவரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் சித்ரா விஜயன் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலா்கள் கலந்து கொண்டனர்.