ஆன்லைனில் பண மோசடி: சைபர் கிரைமில் இஞ்ஜினியர் புகார்

இணையவழி மூலம் என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.1.5 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-03-04 14:52 GMT

விழுப்புரம் அருகே வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 32). இவர் கடலூர் சிப்காட்டில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருடைய செல்போனுக்கு கடந்த 27-ம் தேதியன்று மர்ம நபர் ஒருவர், பகுதிநேர வேலை விஷயமாக ஒரு லிங்கை வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார். இதைப்பார்த்த கிருஷ்ணகுமார், அந்த லிங்கிற்குள் சென்று தன்னுடைய கடவுச்சொல்லை பதிவு செய்தார்.

பின்னர் அந்த நபர் அனுப்பியிருந்த புகைப்படத்தை லைக் செய்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பியுள்ளார். அதற்காக டாஸ்க் கூலியாக ரூ.400-ஐ கிருஷ்ணகுமார் பெற்றார். பின்னர் ஒரு டெலிகிராம் மூலம் கிருஷ்ணகுமாரை தொடர்புகொண்டு பேசிய மர்ம நபர், சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார்.

இதை நம்பிய கிருஷ்ணகுமார், கடந்த 1-ம் தேதியன்று தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு, தனது மனைவி மற்றும் உறவினர் ஒருவரின் வங்கி கணக்குகளில் இருந்தும், தன்னுடைய ஜிபே மூலமாகவும் அந்த மர்ம நபர் கூறிய வங்கிகளின் கணக்குகளுக்கு 6 தவணைகளாக ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 844-ஐ அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற மர்ம நபர், கிருஷ்ணகுமாருக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து இணைய வழியில் ஏமாந்த இன்ஜினீயர் கிருஷ்ணகுமார் விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் காவல்துறையில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் பூங்கோதை, உதவி ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் காவல்துறையினர் மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

காவல்துறை எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பண ஆசையில் ஏமாந்து பணத்தை இழந்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆன்லைனில் ஏமாந்தவர்கள் தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறையை  அணுகி வருகின்றனர்,

இதில் ஒரு சிலர் மட்டுமே காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருகின்றனர், பலர் சொற்ப பணம் தானே என்று வெளியே சொல்ல முடியாமல் இழந்ததை திரும்ப பெற முடியாமலும் தவித்து வருகின்றனர். தற்போது செல்போன் தாக்கம் ஆன்லைனில் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில் உருவாகி இருக்கிறது, இதனை தடுக்க காவல்துறை, மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களிடையே தொடர்ந்து நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News