கால்நடைகளுக்கு பரவும் லம்பி நோயை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு பரவும் லம்பி நோயை கட்டுப்படுத்த, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-11-18 12:02 GMT

விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு வேகமாக பரவி வரும் லம்பி நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விழுப்புரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து, விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இதில் வட்டாட்சியர் ஆனந்தகுமார் மற்றும் வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள், தென்பெண்ணை ஆற்றில் ஏனாதிமங்கலத்தில் மணல் குவாரி, பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு உருவாகும். எனவே, இந்த குவாரி அமைக்கும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்.

லம்பி நோய் (தோல்கலவை நோய்) தாக்குதலால், கால்நடைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு பரவக்கூடியதாக இருக்கிறது. எனவே, கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆகையால், வேகமாக பரவும் இந்த நோயை தடுக்க, உரிய தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கிராமங்கள்தோறும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு முகாம்கள் நடத்தி கால்நடைகளுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு கால்நடை மருத்துவமனைகளில், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. அதையும் சரிசெய்ய வேண்டும். பி.எம். கிசான் நிதி உதவி திட்டத்தில் விவசாயிகளுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. முன்பு விண்ணப்பித்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு தற்போது குடும்பத்துக்கு ஒருவருக்கு மட்டும்தான் என்று கூறப்படுகிறது.

விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டில், வெளிப்படைத்தன்மை இல்லை. இதில் பல முறைகேடுகள் நடக்கிறது. புள்ளியியல் துறை சார்பில் சரியான முறையில் பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு எடுக்கப்படுவதில்லை. எனவே, தமிழக அரசே பயிர் காப்பீட்டுத்திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். தற்போது மழை பெய்து வருகிற போதிலும், இன்னும் பல ஏரிகள் நிரம்பவில்லை. எனவே, ஏரிகளையும், அதன் வரத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்து பேசினர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், விவசாயிகள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் தீர்வு காணப்படும் என பதிலளித்தார்.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு பருவநிலை மாற்றம் காரணமாக கோமாரி நோய் தாக்குதல் அதிகளவில் கால்நடைகளை தாக்கி வருகிறது அதனால் உடனடியாக கால்நடை பராமரிப்புத்துறையை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டு ஆங்காங்கே கால்நடை மருத்துவ முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பொதுமக்கள் மத்தியில் இந்த கோரிக்கைகள் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது அதனால் மாவட்ட நிர்வாகம் விரைவில் கால்நடை முகாம்களை நடத்த வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News