நூறு நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் நூறுநாள் வேலை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவாமாத்தூர், அயனம்பாளையம், முத்தாம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் கடந்த 5 மாதங்களாக மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை மறுப்பதோடு, இந்த 5 மாதத்தில் 10 நாட்களுக்குள் தான் வேலை வழங்கி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், வேலை வழங்காதவர்கள் மீது அரசாணை 52 ன் படி நடவடிக்கை எடுக்கவும், உடனடியாக வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அயினம்பாளையம் கிளை தலைவர் அன்பழகன் தலைமையில் சுமார்100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் கோலியனூர் ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர். மாநில குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ஜோசப் தலைமையிலான ஒன்றிய அலுவலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்குவதாக உறுதி அளித்தனர்
இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் ஜி.ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் குறலரசன், பொருளாளர் மும்மூர்த்தி, முத்தியால்பேட்டை ஜெயந்தி, கொய்யா தோப்பு தீபலட்சுமி,முத்தாம்பாளையம் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.