டி.ஜி.பி. மீதான பாலியல் வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் டி.ஜி.பி. மீதான பாலியல் வழக்கை 25ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சிறப்பு டி.ஜி.பி. மற்றும் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம் குறுக்கு விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில், அரசுதரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு டி.ஜி.பி., எஸ்.பி. ஆகியோர் ஆஜராகவில்லை. இவர்கள் ஆஜராகாததற்கான காரணம் குறித்து அவர்களின் வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். இதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து அரசுதரப்பு சாட்சிகள் ஆஜராகாத நிலையில் வழக்கு விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.