பழங்குடி இன இருளர்கள் மீது போலீஸ் பொய் வழக்கு கண்டித்து ஆர்ப்பாட்டம்
போலீசார் பழங்குடி இருளர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புவதை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
புதுச்சேரி,காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் இரு சிறுவர்கள் உட்பட 7 இருளர்களை சித்ரவதை செய்து, அவர்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்த காவல்துறையின் செயலை கண்டித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பி.வி.ரமேஷ் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் எம்டி.குலாம்மொய்தீன், மனித நேய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் முஸ்தாத்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் கே.தமிழே, ம.தி.மு.க நரசிம்மன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஏ.சங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டு பழங்குடி இருளர்களை சித்ரவதை செய்து பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த புதுச்சேரி - காட்டேரிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் சரண்யா உள்ளிட்ட போலீசார் மீது வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், இருளர்கள் மீது மயிலம் காவல் நிலையத்தில் கண்டு பிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை போட்டு வரும் மயிலம் காவல் ஆய்வாளர் லட்சுமி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யவேண்டும், இருளர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளை வாபஸ் வாங்கி, அவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்,சி.பி.ஐ. புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் இருளர் பழங்குடி பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் தலைவர் க.சிவகாமி, பொதுச்செயலாளர் சு.ஆறுமுகம், பொருளாளர் மு.நாகராஜன் உட்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மனிதநேய மக்கள் கட்சி - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) திராவிடர் கழகம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், புதுவை மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி, தமிழ் இளைஞர் கூட்டமைப்பு, கரிகால் சோழன் பசுமை படை,புதுச்சேரி பூர்வீக பழங்குடி இருளர் இளைஞர்கள் முன்னேற்றச் சங்கம், பழங்குடியினர் விடுதலை இயக்கம், -பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.