விழுப்புரம் அருகே இடிந்து விழுந்த நிலையில் நூலகம்
விழுப்புரம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள நூலகத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
விழுப்புரம் அருகே இடிந்து விழும் நிலையில் இருக்கும் கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் நூலகங்கள் பலவற்றுக்கு சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டிடத்திலும், சில நூலகங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறபோதிலும் அந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து எந்தநேரத்திலும் இடிந்துவிழும் அபாயத்திலும் இயங்கி வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பொது நூலகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நூலகங்களில் சில நூலக கட்டிடங்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
விழுப்புரம் அருகே வளவனூர் சத்திரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள கிளை நூலகம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த நூலக கட்டிடம் கடந்த 1995-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இங்கு நூலக அலுவலர்கள் 2 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நூலகத்திற்கு நூற்றுக்கணக்கான வாசகர்கள் உள்ளனர்.
இந்நூலகத்தில் வரலாறு இலக்கியம், நாவல்கள், தலைவர்களின் வரலாறு, வாழ்க்கையில் சிகரம் தொட்ட சாதனையாளர்களின் வரலாறு கட்டுரை, ஆன்மீகம், சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த நூல்கள் உள்ளன. இந்த நூலக கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதன் விளைவாக தற்போது நூலக கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.
கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது. கட்டிட சுவர்களிலும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்ட நிலையில் உள்ளது. இதனால் இந்நூலகத்திற்கு வரும் வாசகர்கள் ஒருவித அச்சத்துடனேயே வந்துசெல்கின்றனர்.
மேலும் மழைக்காலங்களில், நூலக கட்டிடத்திற்குள் தண்ணீர் கசிவு ஏற்பட்டு ஒழுகுவதால் நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் மழைநீரில் நனைந்து வீணாகும் அவலமும் நடந்து வருகிறது. எனவே இந்த நூலக கட்டிடத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள், வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
இதேபோன்று மாவட்டம் முழுக்க ஒரு சில நூலக கட்டிடங்கள் பராமரிப்பு இன்றியும் வாடகை கட்டிடத்திலும் இயங்கி வருகின்றன அவைகளை கண்டறிந்து சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக சரி செய்ய வேண்டும் அல்லது புதிய கட்டிடங்கள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் மத்தியில் கோரிக்கையாக இருந்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறையை முடுக்கி விட்டு பழுதுபட்ட நூலகங்களை கணக்கெடுப்பு செய்து உடனடியாக புதிய கட்டிடங்களும் வாடகை கட்டிடங்களில் இருக்கும் நூலகங்களுக்கு சொந்த இடத்தில் புதிய கட்டிடங்கள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.