வங்கி ஊழியரிடம் கிரிப்டோ கரன்சி மோசடி
வங்கி ஊழியரிடம் கிரிப்டோ கரன்சி முதலீடு மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி, விழுப்புரம் வங்கி ஊழியரிடம் ரூ.1.89 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் ரவிராஜன் (வயது 37). வங்கி ஊழியரான இவருடைய செல்போனுக்கு வாட்ஸ்-அப்பில் கடந்த 19-ந் தேதியன்று ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் ரவிராஜனின் டெலிகிராம் ஐ.டி.யை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ஒரு லிங்கையும் அனுப்பியுள்ளனர். இதைப்பார்த்த ரவிராஜன், அந்த லிங்கிற்குள் சென்று தனது பாஸ்வேர்ட், யூசர் ஐ.டி.யை பதிவு செய்தார். பின்னர் மர்ம நபர் ஒருவர், ரவிராஜனை தொடர்புகொண்டு, கிரிப்டோ கரன்சியில் சிறிய தொகையை முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறினார்.
இதை நம்பிய ரவிராஜன், முதலில் ரூ.1,000 அனுப்பி, ரூ.1,580 ஆகவும், 2-வதாக ரூ.3 ஆயிரம் செலுத்தி ரூ.4,930 ஆகவும் பெற்றார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து ரவிராஜன், அந்த மர்ம நபர் அனுப்பச்சொன்ன வங்கியின் கணக்குகளுக்கு 3 தவணைகளாக ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்தையும், பின்னர் சில மணி நேரம் கழித்து 3 தவணைகளாக ரூ.53 ஆயிரத்து 500 என மொத்தம் 6 தவணைகளாக ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 500-ஐ அனுப்பினார்.
ஆனால் அவருக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. அப்போதுதான், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி மர்ம நபர்கள், பணத்தை மோசடி செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மாவட்ட காவல்துறை சார்பில், மக்களுக்கு இது மாதிரியான ஏமாற்று வேலைகள் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது, ஆனால் மக்கள் பேராசை காரணமாக இதுபோல் ஏமாறுவது தொடர் கதையாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.