விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு தீவிரம்
விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர் மாவட்டத்தில் குடியிருப்புகளை சூழ்ந்தது மட்டுமின்றி விவசாய விளைநிலங்களையும் மூழ்கடித்தது. அதுமட்டுமின்றி பல ஏரிகள் நிரம்பி அதிலிருந்து வெளியேறிய உபரிநீரும் விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த பல ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் மூழ்கியது.
ஒரு சில நிலங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, கவலையடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நெல் நடவு செய்யப்பட்டிருந்த 18,487 ஹெக்டேர், உளுந்து உள்ளிட்ட சிறுதானியங்கள் பயிர்கள் 61 ஹெக்டேர், பருப்பு வகை பயிர்கள் 1,601 ஹெக்டேர், பருத்தி பயிர்கள் 41 ஹெக்டேர், கரும்பு பயிர் 417 ஹெக்டேர், எள் பயிர் 37 ஹெக்டேர் என மொத்தம் 20,644 ஹெக்டேர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இது குறித்து சேத விவரங்களை கணக்கிட்டு மதிப்பீடு நிர்ணயிக்கும் பணியில் வருவாய்த்துறையினரும், வேளாண் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.