ஊழல் குறித்துப் பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை
ஊழல் குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை என்றார் சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன்
ஊழலைப் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்
விழுப்புரத்தில் நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மேலும் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியது:
கடந்த ஆண்டு பொங்கல் பரிசில் கரும்பு வழங்கியபோது பல விமர்சனங்கள் வந்தன. அதை கணக்கில் வைத்து அதிக எச்சரிக்கையுடன் அரசு, இந்தாண்டு 6 அடி செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளது. எல்லா இடங்களிலும் 6 அடி நீளத்துக்கு கரும்பு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யும்போது 5 அடி, 5½அடி கரும்புகளையும் கொள்முதல் செய்யுமாறு அரசிடம் எடுத்துரைத்துள்ளோம்.
ஊழலைப் பற்றி பேச பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தகுதியில்லை. மத்திய அரசில் ஊழலே இல்லையா, பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் ஊழல் இல்லையா, எங்கு ஊழல் நடந்தாலும் அதை நாங்கள் கண்டிப்போம், உரிய நடவடிக்கை எடுக்க புகார் அளிப்போம். செவிலியர்களின் போராட்டம் நியாயமானது, அரசு பரிசீலித்து ஏற்கனவே இருக்கிற பணியை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
தேர்தல் வாக்குறுதிகளாக திமுக அரசு, அறிவித்த வாக்குறுதிகளை 5 ஆண்டு காலத்துக்குள் படிப்படியாக நிறைவேற்றுவோம் என்கிறார்கள். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 மற்றும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் அரசு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இதை விரைந்து செய்தால் நல்லது.
நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம், தனது 3-ஆவது சுரங்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்த உள்ளவர்களை அழைத்து பேச வேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு, பணி வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். என்.எல்.சி. நிர்வாகத்தின் கடந்த கால மோசமான அணுகுமுறையால் தற்போது நிலம் கொடுக்க தயங்குகிறார்கள். ஆகவே வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.
அப்போது முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.முத்துகுமரன்,சே.அறிவழகன் உட்பட பலர் உடனிருந்தனர்.