ஒலக்கூர் பி. டி. ஓ.அலுவலகம் முன் அல்வா வியாபாரம் செய்த கவுன்சிலர்கள்
விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் பி.டி.ஓ. அலுவலகம் முன் சுயேச்சை கவுன்சிலர்கள் அல்வா வியாபாரம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சுயேச்சை கவுன்சிலர்கள் அல்வா விற்று நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் ஒன்றிய சுயேச்சை கவுன்சிலர்களாக இருப்பவர்கள் நொளம்பூர் எழிலரசன், கீழ்கூடலூர் பூங்கொடி. இவர்கள் 2 பேரும் வியாழக்கிழமை ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அல்வா விற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஜி.எஸ்.டி. உள்பட ஒரு கிலோ அல்வா 100 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக போர்டு வைத்தனர். இது பற்றி அறிந்ததும் பலர் முந்தியடித்துக்கொண்டு வந்து அல்வா வாங்கிச் சென்றனர். இது குறித்து சுயேச்சை கவுன்சிலர் எழிலரசன் கூறுகையில், நொளம்பூர் ஊராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டும் பணியை ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் தனக்கு வழங்கினார். ஆனால் பணியை செய்ய விடாமல் சிலர் தடுத்து வருகிறார்கள். கட்டிடத்தையும் சேதப்படுத்தி உள்ளனர். நொளம்பூர் ஏரியில் பொதுமக்களுக்கு இலவசமாக மீன் வழங்கப்படுவதையும் ஒரு சிலர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தடுத்து நிறுத்தினர். மக்களுக்கு எந்த வித நல்லது செய்தாலும், அதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், எங்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் ஒலக்கூர் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தி கவுன்சிலர்களை களைந்துபோக செய்தனர். இதனால் அப்பகுதி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் அல்வா வியாபார நூதன போராட்டம் பரவலாக பேசப்படும் நிலைக்கு மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே மாதிரி மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி இடங்களில் வெற்றி பெற்ற சுயேச்சை உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் ஒலக்கூர் பி டி.ஓ.அலுவலகத்தில் சுயேச்சைகள் அல்வா வியாபாரம் செய்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தது விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.