பெண் குழந்தைகள் பிறப்பை அதிகப்படுத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம்
பெண் குழந்தைகள் பிறப்பை அதிகப்படுத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம், "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தின் மூலம், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை பாதுகாப்பது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் பேசியதாவது:
கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேசிய அளவில் 1000க்கு 918 குழந்தைகள் பாலின வீதமும், தமிழகத்தில் 1000க்கு 943 குழந்தைகள் பாலின வீதமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் 2021-2022 கணக்கெடுப்பின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் பாலின விகிதம் குறையாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அதையே தொடர்ந்து நீடித்திடும் வகையில் பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பெண் குழந்தைகளுக்கு முழுமையாக கல்வி கற்க உறுதுணையாக இருக்க அரசு வழங்கும் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி பாதுகாக்க வேண்டும். பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறையாமல் இருக்க போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்
கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தவறுகள் நடந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், இளவயது பெண்கள் மற்றும் புதுமண தம்பதியினருக்கு மருத்துவர்களின் ஆலோசனைகளை உரிய காலத்தில் வழங்கி தாயும், சேயும் நலமுடன் இருக்க வகையில் பணி மேற்கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளுக்கு 18 வயதுக்கு கீழ் திருமணம் நடத்துவதை தடை செய்து பெற்றோருக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் ராஜம்மாள், மகளிர் திட்ட இயக்குநர் காஞ்சனா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா, மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் வேல்முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.